மன அழுத்தம் காரணமாக விஷ ஊசி போட்டு பெண் டாக்டர் தற்கொலை

மன அழுத்தத்தின் காரணமாக விஷ ஊசி போட்டு பெண் டாக்டர் தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2019-03-29 23:30 GMT
புதுச்சேரி,

புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மணி. சென்னை மத்திய அரசு நிறுவனத்தில் ஆடிட்டராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி காயத்ரி, புதுவையில் உள்ள ஒரு பிரெஞ்சு பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார். இவர்களது 2-வது மகள் ராதிகா (வயது 24). விழுப்புரம் மாவட்டம் வானூர் அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வந்தார்.

ராதிகா சமீப காலமாக மனஅழுத்த நோயால் பாதிக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது. இதற்காக அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் அவர் வேலைக்கு சென்றார். பணியை முடித்து விட்டு மதியம் வீடு திரும்பினார். அப்போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்துகொள்ளும் நோக்கத்தில் தனக்கு விஷ ஊசி போட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. இதில் அவர் மயங்கி விழுந்தார்.

மாலையில் வீடு திரும்பிய காயத்ரி வீட்டில் மகள் ராதிகா மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அருகில் இருந்தவர்களின்உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு ராதிகாவை டாக்டர்கள் பரிசோதித்து, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் ராதிகாவின் அறையை போலீசார் சோதனை செய்த போது அங்கு ஒரு கடிதம் சிக்கியது. அதில் ‘எனக்கு டாக்டராக இருக்க விருப்பமில்லை. அதிக மன அழுத்தம் இருப்பதால் நான் தற்கொலை செய்துகொள்கிறேன்’ என்று குறிப்பிட்டு இருந்ததாக தெரிகிறது. அந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்