பகலில் சுட்டெரிக்கும் வெயில்... இரவில் பனி மூட்டம்...! மாறும் கால நிலையால் பொதுமக்கள் கடும் அவதி
கடலூர் மாவட்டத்தில் பகலில் சுட்டெரிக்கும் வெயிலும், இரவில் பனி மூட்டமுமாக உள்ளது. மாறும் கால நிலையால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
நெல்லிக்குப்பம்,
கடலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு போதிய அளவு மழை பெய்யவில்லை. இதன் காரணமாக பெரும்பாலான குளங்கள், ஏரிகள் நிரம்பவில்லை. இதன் தொடர்ச்சியாக வெயில் சுட்டெரித்து வருவதால் ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளில் இருந்த தண்ணீர் வேகமாக குறைந்து, வறண்டு கிடக்கின்றன.
மேட்டூர் அணையில் இருந்து வீராணம் ஏரிக்கு வந்த தண்ணீரை நம்பி சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், சேத்தியாத்தோப்பு, குமராட்சி பகுதி விவசாயிகள் நெல் சாகுபடி செய்திருந்தனர். காவிரி நீர் மட்டும் கைகொடுக்காவிட்டால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பார்கள்.
கடலூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாத இறுதியில் இருந்தே வெயிலின் தாக்கம் தொடங்கியது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே செல் கிறது. குறிப்பாக காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெயில் சுட்டெரிக்கிறது. அந்த சமயத்தில் அனல் காற்றும் வீசுவதால் பாதசாரிகள், வாகன ஓட்டுகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, விருத்தாசலம், நெய்வேலி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகளில் தற்காலிக கடைகளும் முளைத்துள்ளன. அதில் நீர்ச்சத்து நிறைந்த இளநீர், வெள்ளரிக்காய், தர்பூசணி, கரும்பு ஜூஸ், பதநீர் உள்ளிட்டவை விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக இரவில் பனி மூட்டமும், பகலில் வெயிலும் சுட்டெரிக்கிறது. அதிகாலையில் மார்கழி மாத பனியை போன்று இருந்தது. காலை 7 மணி வரை பனி மூட்டம் இருப்பதால் சாலைகளில் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்கள் செல்வதை காணமுடிகிறது.
ரெயில்களும் முகப்பு விளக்கை எரியவிட்டபடி செல்கிறது. பகலில் வெயிலுடன், அனல் காற்றும் வீசுகிறது. இவ்வாறு கால நிலை மாறி, மாறி வருவதால் கடலூர் மாவட்ட மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இயற்கை மாற்றத்தால் சளி, காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.