தம்பதியை கொடூரமாக கொன்று நகை–பணம் கொள்ளை: 2 பேருக்கு 30 ஆண்டு சிறை தண்டனை
கணவன்–மனைவியை கொடூரமாக கொன்று, நகை, பணத்தை கொள்ளையடித்த சம்பவத்தில் 2 பேருக்கு 30 ஆண்டு சிறை தண்டனை விதித்து மதுரை மாவட்ட கோர்ட்டு தீர்ப்பளித்தது.
மதுரை,
மதுரை பெருங்குடியை அடுத்த குசவன்குண்டு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீராமன் (வயது 60). இவர் ரெயில்வேயில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். அவருடைய மனைவி கீதா (54). கடந்த 2010–ம் ஆண்டில் இவர்களது வீட்டில் பெயிண்ட் அடிப்பதற்காக அவனியாபுரத்தை சேர்ந்த கூலித்தொழிலாளிகள் சோணை (35), கார்த்திக் என்ற கார்த்திகேயன் (28) ஆகியோர் வந்து வேலை செய்தனர்.
அந்த சமயத்தில் ஸ்ரீராமனும், அவரது மனைவியும் வீட்டில் உள்ள ஒரு அறையில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். அவர்கள், இருவரும் ஸ்ரீராமனின் ஓய்வூதிய தொகையை செலவு செய்வது பற்றியும், சேமிப்பது பற்றியும், வீட்டில் உள்ள நகைகள் பற்றியும் பேசியுள்ளனர். இதை சோணையும், கார்த்திக்கும் கேட்டுக்கொண்டே இருந்தனர்.
சில நாட்கள் கழித்து, அவர்கள் இருவரும் ஸ்ரீராமனின் வீட்டில் கொள்ளையடிக்க திட்டம் போட்டனர். அதன்படி கடந்த 12.4.2010 அன்று அவர்கள் இருவரும் அந்த வீட்டுக்குள் புகுந்தனர்.
அங்கு இருந்த கணவன்–மனைவி இருவரையும் கம்பியால் தாக்கி கொடூரமாக கொலை செய்தனர். பின்னர் அங்கிருந்த 10 பவுன் தங்க நகை, பணத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவம் குறித்து பெருங்குடி போலீசார் வழக்குபதிவு செய்து, 2 பேரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. அரசு தரப்பில் வக்கீல் சங்கரன் ஆஜரானார்.
முடிவில் இந்த வழக்கில் சோணை, கார்த்திக் ஆகிய இருவரும் குற்றவாளிகள் என்று நீதிபதி கார்த்திகேயன் தீர்ப்பளித்தார். அந்த தீர்ப்பில், இந்திய தண்டனைச்சட்டம் 120 பி (கூட்டுச்சதி) பிரிவின்கீழ் இருவருக்கும் தலா ஒரு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. இரட்டைக்கொலைக்காக தலா 2 ஆயுள்தண்டனையும் ரூ.20 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. 449–வது (குற்றமுறு அத்துமீறல்) பிரிவின்கீழ் தலா 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், 397–வது (கூட்டுக்கொள்ளை) பிரிவின்படி தலா 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. குற்றவாளிகள் இருவரும் குறைந்தபட்சம் 30 ஆண்டுகள் தண்டனை அனுபவிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் குற்றவாளிகள் 2 பேருக்கும் தலா 3 ஆயுள் தண்டனை மற்றும் 2 பிரிவுகளில் தலா 10 ஆண்டு சிறை என தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. ஒரு ஆயுள் தண்டனை என்பது குறைந்தது 14 ஆண்டுகள் ஆகும். அந்த வகையில், அவர்கள் மொத்தம் 62 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ளனர். ஆனால், குறைந்தபட்சம் 30 ஆண்டுகளாவது அவர்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டு இருப்பதால், அவர்கள் கண்டிப்பாக 30 ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.