கரூரில் வாகன சோதனை: கோழி வியாபாரியிடம் ரூ.1¾ லட்சம் பறிமுதல் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை

கரூரில் நடந்த வாகன சோதனையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கோழி வியாபாரியிடம் இருந்து ரூ.1¾ லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

Update: 2019-03-29 22:00 GMT
கரூர், 

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் உள்ளது. இதனால் கரூர் மாவட்டத்தில் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகனசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒருபகுதியாக நேற்று கரூர் காந்திகிராமம் தெரசா பள்ளி அருகே, பறக்கும் படை அதிகாரி தவமணி தலைமையிலான தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஈரோட்டை சேர்ந்த சுரேஷ் (வயது 35) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது அவரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோது, உரிய ஆவணங்களின்றி ரூ.1 லட்சத்து 85 ஆயிரத்து 360 வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் அவர் தான் கோழி வியாபாரம் செய்து வருவதாகவும், வையம்பட்டி உள்ளிட்ட இடங்களில் உள்ள கோழிக்கடைக்காரர்களிடம் தொகையை வசூல் செய்து விட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

எனினும் அந்த பணத்திற்கான உரிய ஆவணம் ஏதும் அவரிடம் இல்லாததால், தேர்தல் நடத்தை விதிப்படி அதனை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அந்த பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் கரூர் வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தியிடம் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்