குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில் அதிகமாக நடக்கிறது - கமல்ஹாசன் பேட்டி
தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக நடப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறினார்.
கோவை,
கோவை துடியலூர் அருகே 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் உயிரிழந்த சிறுமியின் பெற்றோரை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதன் பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
உயிரிழந்த சிறுமியின் பெற்றோரை பார்த்து ஆறுதல் கூறுவதற்காக நான் இங்கு வந்தேன். அவர்கள் இந்த சம்பவத்தில் தங்களுக்கு நியாயம் கிடைத்ததாக நம்பவில்லை. மேலும் இந்த விஷயத்தில் போலீசார் மிகவும் நிதானமாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் தமிழக காவல் துறை தன் கடமையை செய்யும் என நம்புகிறேன். இது தொடர்பாக கோவை மண்டல ஐ.ஜி.யை சந்திக்க அனுமதி கேட்டிருந்தேன். ஆனால் அவர் தேர்தல் பணியில் இருப்பதாக கூறி, சந்திக்க அனுமதி கொடுக்க வில்லை. நானும் தேர்தல் வேலையில் தான் இருக்கிறேன். தமிழகம் முழுவதும் எங்கள் கட்சி வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர். எங்களை தேர்தல் வேலை செய்ய விடாமல் பல இடங்களில் தேர்தல் ஆணையம் தடுக்கின்றது.
பெண் குழந்தைகள் வீட்டில் இருந்து 20 அடி தூரம் தள்ளி விளையாட முடியாத சூழல் நிலவுகின்றது. இதை அனைவரும் மாற்ற வேண்டும். தேர்தலுக்காக இங்கு நான் வரவில்லை, எந்த நேரத்தில் இது போன்ற சம்பவம் நடந்திருந்தாலும் நான் வந்திருப்பேன்.
தமிழகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் இனி மேல் நடக்காமல் இருக்க வேண்டும். நாம் எல்லா குழந்தைகளையும், நம் வீட்டு குழந்தையாக பார்க்க வேண்டும். பொள்ளாச்சி சம்பவம் மற்றும் சிறுமியின் கொலை உள்ளிட்ட சம்பவத்தில் பெண் குழந்தைகள் பெற்ற பெற்றோர்கள் மத்தியில் பதற்றம் நிலவுகிறது. இதனை தணிக்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். இது தேர்தலுக்கான பேச்சு இல்லை. இந்த சம்பவத்தை பற்றி அதிகம் பேர் பேச வேண்டும் என்பதற்காகத்தான் நான் இங்கு வந்துள்ளேன். இது தமிழகத்திற்கு அவமானம் என்பதை அனைவருக்கும் தெரிய வேண்டும்.
இவ்வளவு சிறிய ஊரில், இது போன்ற சம்பவம் எப்படி நடந்தது என்று தெரியவில்லை. குற்றவாளிகளை சுலபமாக போலீசார் கண்டுபிடிக்கலாம். இதனை துரிதப்படுத்த வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. பரிசு வாங்கித்தான் இந்த வட்டாரத்தில் உள்ளவர்கள் குற்றவாளிகளை காண்பித்து கொடுத்தால் அதை விட மோசமானது எதுவும் இல்லை. எனவே பரிசு எதுவும் வாங்காமல் குற்றவாளிகளை பொதுமக்கள் காட்டிக்கொடுக்க வேண்டும்.
தமிழகத்தில் பாலியல் தொடர்பான வழக்குகள் மெதுவாக நடந்து கொண்டு இருக்கின்றது. தமிழகத்தில்தான் குழந்தைகள் மீதான குற்றங்கள் அதிகம் நடப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரத்தில் அரசு மெத்தனமாக இருக்கிறது. அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் இருக்கின்றது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது கோவை நாடாளுமன்ற தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மகேந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
பின்னர் சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையத்துக்கு கமல்ஹாசன் காரில் புறப்பட்டார்.அப்போது வழியில் சிறுமிகொலை குறித்து விசாரிக்க அந்த கிராமத்துக்கு காரில் வந்த கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜனை சந்தித்தார். அவரிடம் கமல்ஹாசன், உயிரிழந்த சிறுமியின் பெற்றோருக்கு நீதியை பெற்று தரும்படியும், குற்றவாளிகளை விரைந்து கைது செய்யும் படியும் வலியுறுத்தினார்.