கம்பத்தில், டிராக்டர் திருடியவர் சிக்கினார்
கம்பத்தில் டிராக்டர் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
கம்பம்,
கம்பம் நந்தகோபாலன் கோவில் தெற்கு தெருவை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 34). விவசாயி. இவர் சொந்தமாக டிராக்டர் வைத்துள்ளார். இவர் கடந்த 16-ந்தேதி விவசாய பணிக்கு டிராக்டரை ஓட்டி சென்றார். பின்னர் இரவு அதேபகுதியில் உள்ள பகவதிராஜ் என்பவர் வீட்டின் முன்பு நிறுத்தி விட்டு வீட்டிற்கு திரும்பினார். மறுநாள் காலை டிராக்டரை எடுக்க வந்தபோது டிராக்டர் திருடு போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து ஈஸ்வரன் கம்பம் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சவடமுத்து தலைமையில் போலீசார் டிராக்டரை தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலை கம்பம்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரை வழிமறித்து சோதனை செய்தனர்.
விசாரணையில், டிராக்டரை ஓட்டி வந்த அவர், கம்பம் விவேகானந்தர் தெருவை சேர்ந்த மனோகரன் (49). அந்த டிராக்டரை கம்பம் நந்தகோபாலன் கோவில் தெற்கு தெருவில் இருந்து திருடி சென்றதை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து கம்பம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அந்த டிராக்டரை பறிமுதல் செய்தனர்.