பனைக்குளம் கடற்கரையில் ஒதுங்கிய ஏவுகணை என்ஜினால் ஆபத்து இல்லை இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்

ராமநாதபுரம் அருகே பனைக்குளம் புதுக்குடியிருப்பு கடற்கரையில் கரை ஒதுங்கிய பிரமோஸ் ஏவுகணை என்ஜினால் ஆபத்து இல்லை என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

Update: 2019-03-29 23:00 GMT

பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் ஊராட்சி புதுக்குடியிருப்பு கிராமத்தில் உள்ள கடற்கரையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரமோஸ் ஏவுகணையின் என்ஜின் கரை ஒதுங்கியது. இந்த என்ஜின் சுமார் 15 அடி நீளமும், வெளிப்புறங்களில் வயர் இணைப்புகளும் காணப்பட்டன. தகவல் அறிந்ததும் அழகன்குளம் கிராம நிர்வாக அலுவலர் ஜெகநாதபூபதி, தேவிபட்டினம் கடலோர போலீசார் அங்கு சென்று பார்வையிட்டதுடன் இதுபற்றி உயர் அதிகாரிகளிடம் தெரிவித்தனர். உடனே கியூ பிரிவு போலீசார், மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் கடற்கரைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் மூலம் சோதனை நடத்தினர். ஆனால் இந்த ஏவுகணையால் ஆபத்து ஏற்படுமோ என்ற சந்தேகத்தில் அதனை மேற்கொண்டு சோதனையிடவில்லை. மேலும் தேவிபட்டினம் கடலோர போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட இருந்த அந்த என்ஜின் கடல் தண்ணீரின் அருகாமையில் இருக்கும் வகையில் அழகன்குளம்–புதுக்குடியிருப்பு இடையே கடற்கரை பகுதியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று இஸ்ரோ விஞ்ஞானி நிக்கோலஸ் தலைமையில் 5 விஞ்ஞானிகளை கொண்ட குழுவினர் ஏவுகணை பாகத்தை பார்வையிட்டனர். இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறும்போது, கரை ஒதுங்கியுள்ள இந்த என்ஜின் நைட்ரஜன் மோட்டார் என்ஜின் ஆகும். இது ஏவுகணையை உந்து சக்தியுடன் எரிபொருள் கொண்டு செல்வதற்கு துணைபுரியும். இவை ஒரு குறிப்பிட்ட தூரம் சென்றவுடன் ஏவுகணையில் இருந்து பிரிந்து கடலுக்குள் விழுந்து விடும். வழக்கமாக இந்த என்ஜின் கடலுக்கு அடியில் புதைந்து விடும். எவ்வாறு கடலில் மிதந்து கரை ஒதுங்கியது என்பது தெரியவில்லை. ஸ்டெயின்லெஸ் ஸ்டீலை விட உறுதியான உலோகத்திலானது. தங்கத்துக்கு நிகரான மதிப்புடையதாகும். இந்த என்ஜினால் ஆபத்து எதுவுமில்லை என்று தெரிவித்தனர். பின்பு அதனை ஜே.சி.பி. உதவியுடன் விஞ்ஞானிகள் தங்களது லாரியில் ஏற்றி கொண்டு சென்றனர்.

மேலும் செய்திகள்