வேலைக்கு சேர்ந்த வீட்டில் ரூ.5½ லட்சம் தங்க நகைகள் திருடிய பெண் கைது
வீட்டில் ரூ.5½ லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் வைர நகைகள் திருடிய வேலைக்கார பெண் கைது செய்யப்பட்டார்.
மும்பை,
வீட்டில் ரூ.5½ லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் வைர நகைகள் திருடிய வேலைக்கார பெண் கைது செய்யப்பட்டார்.
தங்கநகைகள் திருட்டு
மும்பை சாந்தாகுருஸ் மேற்கு பகுதியை சேர்ந்தவர் ஜிக்னா தாக்கேர். இவரின் வீட்டில் கடந்த ஜனவரி மாதம் ரூ.5 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் வைர நகைகள் திருட்டு போனது. அப்போது அவரது வீட்டில் புதிதாக சேர்ந்து 2 நாட்கள் மட்டுமே வேலை செய்த வேலைக்கார பெண் வனிதா கெய்க்வாட் (வயது 37) மாயமானார்.
இதனால் சந்தேகம் அடைந்த ஜிக்னா தாக்கேர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அவர்கள் வனிதா கெய்க்வாட்டை வலைவீசி தேடினர்.
பெண் கைது
இந்தநிலையில் போலீசார் நேற்று முன்தினம் அந்த பெண்ணை கோவண்டியில் வைத்து அதிரடியாக கைது செய்தனர். இதில் அவர் தான் ஜிக்னா தாக்கேரின் வீட்டில் நகைகளை திருடியிருந்தது தெரியவந்தது. மேலும் அவர் மீது 32 குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.
கடைசியாக ஒரு வழக்கில் கைதாகி சிறையில் இருந்து வெளியே வந்த அவர் ஓஷிவாரா, ஜூகு, வெர்சோவா மற்றும் சாந்தாகுருஸ் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அடுக்குமாடி வீடுகளில் வேலைக்கு சேர்வது போல் சேர்ந்து தங்கநகைகளை திருடி வந்ததும் தெரியவந்தது.