தாராபுரம் அருகே பரோலில் வந்த கைதி விஷம் குடித்து தற்கொலை மனைவியை கொன்ற வழக்கில் 18 ஆண்டு சிறை தண்டனை பெற்றவர்
தாராபுரம் அருகே மனைவியை கொன்ற வழக்கில் 18 ஆண்டு சிறை தண்டனை பெற்றவர் பரோலில் வந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தாராபுரம்,
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள தளவாய்பட்டிணம், கூட்டுப்புளி தோட்டத்தை சேர்ந்தவர் தண்டபாணி (வயது 45). இவருடைய மனைவி செல்வி. இந்த நிலையில் கடந்த 31.10.1999 அன்று அலங்கியம் போலீஸ் நிலையம் சென்ற தண்டபாணி, தனது மனைவி செல்வி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக புகார் ஒன்றை கொடுத்தார். அப்போது இவருக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் நிறைவடையாததால் தாராபுரம் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தினார். விசாரணையில் செல்வி கர்ப்பமாக இருந்தபோது, அவரிடம் வரதட்சணை கேட்டு, தண்டபாணி துன்புறுத்தியதோடு, அடித்து கொலை செய்ததும், இதனால் வயிற்றில் இருந்த குழந்தை இறந்து போனதும், பிறகு கொலையை மறைப்பதற்காக, செல்வி மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அலங்கியம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, தண்டபாணியை கைது செய்தனர். பின்னர் அவர் மீது தாராபுரம் கோர்ட்டில் வழக்கு நடைபெற்றது. இந்த வழக்கில் தண்டபாணிக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. இதையடுத்து கோவை மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார். அங்கு 17 ஆண்டுகள் சிறையில் இருந்த தண்டபாணி கடந்த 1–ந்தேதி முதல் 31–ந்தேதி வரை ஒரு மாத பரோலில் வீட்டிற்கு வந்துள்ளார். பரோல் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முடிகிறது. இதையொட்டி அவர் சிறைக்கு செல்ல வேண்டியுள்ளது.
இதனால் மனம் உடைந்த தண்டபாணி, நேற்று முன்தினம் இரவு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது பற்றிய தகவல் அறிந்த அலங்கியம் போலீசார், விரைந்து சென்று, தண்டபாணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
இதற்கிடையில் தண்டபாணி தற்கொலை செய்வதற்கு முன்பு ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார். அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர். அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:–
எனக்கு வாழப்பிடிக்கவில்லை. நான் என் மனைவியிடமே போய் சேருகிறேன். என் தற்கொலைக்கு யாரும் காரணமில்லை. இவ்வாறு அதில் எழுதப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையில் தண்டபாணி சிறையில் இருந்த போது ஆன்மிகத்தில் ஈடுபாடு ஏற்பட்டு, அங்கிருந்த கோவிலில் தினமும் பூஜை செய்து வந்துள்ளார். இதனால் சிறையில் உள்ளவர்கள் அவரை பூசாரி தண்டபாணி என்றுதான் அழைப்பார்களாம்.
தண்டபாணியை விடுதலையாகி வெளியில் வந்ததும் மீண்டும் ஒரு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அவரை சந்திக்க செல்லும் உறவினர்கள் வலியுறுத்தி வந்துள்ளனர். இதை ஏற்றுக்கொண்ட தண்டபாணி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தனக்கு பெண் பார்க்கும்படி நண்பர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். நண்பர்களும் ஒரு பெண்ணை பார்த்து முடிவு செய்துள்ளனர்.
திருமணத்தை முன் வைத்து சென்னை ஐகோர்ட்டில் தண்டபாணி மீண்டும் பரோல் கேட்டு விண்ணப்பித்ததாக கூறப்படுகிறது. தண்டபாணியின் விண்ணப்பத்தை ஏற்று, நீதிமன்றம் திருமணத்தை பற்றியும், பெண் வீட்டாரிடம் விசாரணை நடத்தினால், அது பெண் வீட்டாருக்கு அவமானத்தை ஏற்படுத்துமே என்று நினைத்து மனஉளைச்சலில் இருந்து வந்தது தெரியவருகிறது.
தண்டபாணிக்கு இன்னும் ஒரு ஆண்டு மட்டும் தான் சிறை தண்டனை பாக்கி இருந்தது. அதுவும் தண்டபாணியின் நன்னடத்தையை காரணம் காட்டி, தலைவர்கள் பிறந்த நாளில் அரசு அவரை விடுதலை செய்வதற்கும் வாய்ப்பு இருந்துள்ளது. இந்த நிலையில் பரோலில் வந்த தண்டபாணி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.