உடுமலை அருகே குளத்தில் மூழ்கி வாலிபர் பலி நண்பர்களுடன் குளிக்க சென்றபோது பரிதாபம்

உடுமலை அருகே நண்பர்களுடன் குளத்திற்கு குளிக்க சென்ற வாலிபர் தண்ணீரில் மூழ்கி இறந்தார்.

Update: 2019-03-29 22:45 GMT

குடிமங்கலம்,

உடுமலை அருகே உள்ளது கொங்கல்நகரம். இந்த பகுதியில் குளம் ஒன்று உள்ளது. இந்த குளத்திற்கு திருமூர்த்தி அணையில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் அந்த குளத்திற்கு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் குளிக்க செல்வார்கள்.

தற்போது கடுமையான வறட்சி நிலவி வருவதால் அந்த குளத்தில் குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே உள்ளது. அதாவது குளத்தில் 10 அடி ஆழத்திற்கு மண் அள்ளப்பட்ட பகுதியில் மட்டும் தண்ணீர் உள்ளது. இந்த குளத்திற்கு நேற்று காலையில் கொங்கல் நகரை சேர்ந்த அப்பாத்துரை என்பவரது மகன் கார்த்திக் (வயது 19) தனது நண்பர்களுடன் குளிக்க சென்றார்.

அப்போது குளத்தில் குளித்துக்கொண்டிருந்த கார்த்திக், திடீரென்று தண்ணீரில் மூழ்கினார். உடனே காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என்று அபயக்குரல் எழுப்பினார். உடனே அவருடைய நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் அவரை காப்பாற்ற முடியவில்லை. அதற்குள் தண்ணீரில் மூழ்கினார்.

இது குறித்து குடிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து சென்று, பொதுமக்கள் உதவியுடன் குளத்தில் இறங்கி கார்த்திக்கை தேடினார்கள். அப்போது தண்ணீருக்கு அடியில் கார்த்திக் பிணமாக கிடந்தார். இதையடுத்து அவருடைய உடலை மீட்டு வெளியே கொண்டு வந்து, பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து குடிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்த விசாரித்து வருகிறார்கள். நண்பர்களுடன் குளத்திற்கு குளிக்க சென்ற வாலிபர், தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்