நேற்று முன்தினம் புதிதாக அமைக்கப்பட்ட ஈரோடு காந்திஜி ரோட்டில் திடீர் பள்ளம்; வாகன ஓட்டிகள் திணறல்

நேற்று முன்தினம் புதிதாக அமைக்கப்பட்ட ஈரோடு காந்திஜி ரோட்டில் திடீர் பள்ளம் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் திணறினர்.;

Update: 2019-03-29 22:30 GMT

ஈரோடு,

ஈரோடு காந்திஜி ரோட்டில் ஊராட்சிக்கோட்டை கூட்டு குடிநீர் திட்டத்துக்காக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு குழி தோண்டப்பட்டது. அப்போது தலைமை தபால் நிலையம் முன்பு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் அந்த உடைப்பை மாநகராட்சி ஊழியர்கள் சரிசெய்தனர். இதைத்தொடர்ந்து காந்திஜி ரோடு குண்டும், குழியுமாக காட்சி அளித்தது.

மேலும் வாகனங்கள் அதிக அளவில் சென்று வந்ததால் காந்திஜி ரோடு பகல் நேரங்களில் புழுதி மண்டலமாக காட்சி அளித்தது. அதனால் பொதுமக்கள் ரோட்டை விரைந்து சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்று, நேற்று முன்தினம் இரவு ரோட்டின் நடுப்பகுதியில் மட்டும் புதிதாக தார்ரோடு அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று காலையில் வழக்கம்போல் காந்திஜி ரோட்டில் வாகனங்கள் சென்று வந்தன. அப்போது தலைமை தபால் நிலையம் முன்பு திடீரென புதிதாக அமைக்கப்பட்ட ரோட்டில் பள்ளம் ஏற்பட்டு ஒரு வாகனத்தின் சக்கரம் சிக்கியது. அதன் பின்னர் பொதுமக்கள் ஒன்றுகூடி அந்த வாகனத்தை தள்ளி, பள்ளத்தில் இருந்து வெளியில் கொண்டு வந்தனர். இதைத்தொடர்ந்தும் சில வாகனங்கள் அந்த பள்ளத்தில் சிக்கின. இதனால் வாகன ஓட்டிகள் காந்திஜி ரோட்டில் நேற்று திணறியபடி சென்றனர்.

அதன் பின்னர் பொதுமக்கள் நடுரோட்டில் இரும்பு தடுப்பு கம்பிகளை வைத்து வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்தனர். இதுகுறித்து வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கூறும்போது, ‘ஊராட்சிக்கோட்டை கூட்டு குடிநீர் திட்டத்துக்காக குழிதோண்டி மூடியபோது சரியாக அழுத்தம் கொடுக்கவில்லை. இந்த நிலையில் நேற்று இரவு (நேற்று முன்தினம்) சரியான அழுத்தம் கொடுக்காமல் புதிதாக ரோடு போட்டு உள்ளனர். இதனால் ரோடு சேதம் அடைந்துள்ளது’ என்றனர்.

மேலும் செய்திகள்