ஈரோட்டில் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு தே.மு.தி.க.– அ.தி.மு.க. ராசியான கூட்டணி

தே.மு.தி.க., அ.தி.மு.க. ராசியான கூட்டணி என்று ஈரோட்டில் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

Update: 2019-03-29 23:15 GMT

ஈரோடு,

தே.மு.தி.க. மாநில பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், ஈரோடு நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஜி.மணிமாறனை ஆதரித்து ஈரோடு ஆர்.என்.புதூரில் நேற்று திறந்த வேனில் நின்றபடி பிரசாரம் செய்தார். அப்போது அவர் பொதுமக்கள் மத்தியில் பேசும்போது கூறியதாவது:–

அ.தி.மு.க., தே.மு.தி.க. கூட்டணி தமிழக மக்கள் போற்றும் கூட்டணி. தமிழக மக்களின் ஆதரவை பெற்ற கூட்டணி. ஒட்டுமொத்த தமிழக மக்கள் வரவேற்கும் கூட்டணி. அ.தி.மு.க. வேட்பாளர் மணிமாறனை எதிர்த்து போட்டியிடுபவர்கள், தி.மு.க. கட்சியில் இருந்து பிரிந்து வந்து இன்று அதே உதய சூரியன் சினத்தில் தங்கள் கட்சியை ஐக்கியப்படுத்தி கொண்டவர்கள். அவர்களுக்கு டெபாசிட் கூட கிடைக்காது.

நமது வேட்பாளர் வெற்றிபெற்று டெல்லிக்கு சென்று ஈரோடு தொகுதிக்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் உறுதியாக பெற்றுக்கொடுப்பார் என்ற வாக்குறுதியை இந்த நேரத்தில் நான் தெரிவித்து கொள்கிறேன். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்த கூட்டணி வெற்றிக்கூட்டணியாக அமையும்.

விவசாயிகளுக்காக நதிகள் இணைப்பை நாங்கள் சாத்தியப்படுத்துவோம். மேலும் விவசாய கடன் தள்ளுபடி, விலைவாசி கட்டுப்பாடு போன்ற மக்களுக்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் உடனடியாக இந்த கூட்டணி பெற்றுத்தரும். தே.மு.தி.க.வும், அ.தி.மு.க.வும் இணைந்திருக்கும் இந்த கூட்டணி மிகப்பெரிய ராசியான கூட்டணி. கடந்த 2011–ம் ஆண்டு இந்த 2 கட்சிகளும் கூட்டணி சேர்ந்து சரித்திர சாதனை படைத்தது.

அதன் பின்னர் கடந்த 2016–ம் ஆண்டு இந்த கூட்டணியை சூழ்ச்சிக்காரர்கள் பிரித்து விட்டனர். அந்த சூழ்ச்சிக்காரர்கள் தி.மு.க.வின் கைக்கூலியாக மாறி விஜயகாந்துக்கும், ஜெயலலிதாவுக்கும் வெறுப்பை ஏற்படுத்தி இந்த கூட்டணியை பிரித்து விட்டனர். எனவே தி.மு.க. கூட்டணியை நீங்கள் டெபாசிட் இழக்க செய்ய வேண்டும். தி.மு.க. கட்சியினர் யார் வருவார்கள் என்று வலைவீசி தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.

அதற்கு உதாரணம் ஈரோடு தான். எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட ஒரு அமைச்சர் இன்று தி.மு.க.வில் சரண் அடைந்து இருக்கிறார். அதேபோல் விஜயகாந்தால் அடையாளம் காண்பிக்கப்பட்ட ஒருவர் இன்று தி.மு.க.வில் கைக்கூலியாக செயல்பட்டு கொண்டு இருக்கிறார். இந்த துரோகிகளுக்கு மக்களாகிய நீங்கள் சரியான பாடத்தை புகட்டி அ.தி.மு.க. வேட்பாளரை அமோக வெற்றிபெற செய்யுங்கள். வெற்றியை தருவீர்களா? எதிரணியை டெபாசிட் இழக்க செய்வீர்களா? நமது வேட்பாளர் மணிமாறனை இரட்டை இலை சின்னத்தில் வெற்றிபெற செய்வீர்களா?

இவ்வாறு அவர் கூறினார். அதைத்தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த் ஈரோடு கிருஷ்ணம்பாளையம் பகுதியில் பொதுமக்கள் மத்தியில் பேசினார். அப்போது அவருடன் ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கே.வி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.

மேலும் செய்திகள்