வன்முறை கலாசாரத்தை கொண்ட இயக்கம் தி.மு.க. நாமக்கல்லில் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
வன்முறை கலாசாரத்தை கொண்ட இயக்கம் தி.மு.க. என நாமக்கல்லில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
நாமக்கல்,
நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் காளியப்பனை ஆதரித்து நேற்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் நாமக்கல் பூங்கா சாலையில் தேர்தல் பிரசாரம் செய்தார். திறந்த ஜீப்பில் நின்றவாறு அவர் பேசியதாவது:-
நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை நாம் ஒரு அணியாகவும், காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி ஒரு அணியாகவும் எதிர் கொள்ள இருக்கிறோம். இரு கூட்டணிகளும் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி பொறுப்பில் இருந்துள்ளன. இவர்களில் யார் தமிழக மக்களின் தேவையை பூர்த்தி செய்துள்ளார்கள். தமிழக மக்களின் ஜீவாதார பிரச்சினைகளை தடுத்து நிறுத்தி, நல்ல திட்டங்களை பெற்று தந்தது யார் ஆட்சியில் என்பதை மக்கள் எடைபோட்டு பார்க்கும் தேர்தல் இந்த நாடாளுமன்ற தேர்தல்.
காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி ஆட்சி 10 ஆண்டு காலம் இந்தியாவில் இருந்தது. தி.மு.க.வை சேர்ந்த 9 பேர் அந்த ஆட்சியில் அங்கம் வகித்தனர். தமிழக மக்களின் வருவாய் ஆண்டுதோறும் வரியாக ரூ.1 லட்சம் கோடி மத்திய அரசுக்கு செல்கிறது. ஆனால் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தமிழகத்திற்கு எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை. அவர்களின் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ஒரே திட்டம் சேதுசமுத்திர திட்டம்.
இந்த திட்டத்தின் பெயரில் கடலில் கொண்டுபோய் ரூ.40 ஆயிரம் கோடி போடப்பட்டுள்ளது. அது மண்ணில் போனதா? அல்லது அவர்களின் வீடுகளில் சென்று சேர்ந்ததா? என்று தெரியவில்லை. இந்த திட்டம் தொடங்கும்போதே அது நீரோட்டம் உள்ள பகுதி. அதில் எவ்வளவு மணலை கொட்டினாலும் பயனில்லை என இயற்கை ஆர்வலர்கள் சொன்னதை சுட்டிக்காட்டி முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா எடுத்துக்கூறினார். ஆனால் கேட்கவில்லை. இது சுயநலத்திற்காக போடப்பட்ட திட்டம்.
2023-ம் ஆண்டு தொலைநோக்கு திட்டம் என்ற பெயரில் ஜெயலலிதா, தமிழக மக்களின் பொருளாதார நிலை மேற்கத்திய நாடுகளுக்கு இணையாக உயர பாடுபட்டார்.
குடிசை பகுதியில் வசிக்கும் ஏழை மக்களுக்கு கான்கிரீட் வீடு வழங்கப்படும் என அறிவித்தார். அதன்படி தமிழகத்தில் 15 லட்சம் குடிசைகள் இருப்பதாக கணக்கெடுக்கப்பட்டது. அதில் 6 லட்சம் குடிசைகள் கான்கிரீட் வீடுகளாக மாற்றப்பட்டுள்ளது. 2023-ம் ஆண்டுக்குள் தமிழகம் குடிசை இல்லாத மாநிலமாக மாறும்.
இங்கு சாதி, மத கலவரம் இல்லை. தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது. இதன் காரணமாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொழில் தொடங்க முன்வருகின்றனர். தி.மு.க. ஆட்சியில் நிலஅபகரிப்பு, தனிநபர் சொத்தை அடிமாட்டு விலைக்கு மிரட்டி வாங்குதல், சட்டம் ஒழுங்கு சீர்கேடு, காட்டாட்சி தர்பார் நடத்தினர். தற்போது மு.க.ஸ்டாலின் நாடாளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் அ.தி.மு.க. காணாமல் போகும் என்கிறார்.
எம்.ஜி.ஆர். இந்த இயக்கத்தை தொண்டர்கள் இயக்கமாக தொடங்கியபோது 18 லட்சம் உறுப்பினர்கள் இருந்தனர். தற்போது 1½ கோடி தொண்டர்கள் உள்ளனர். எந்த கொம்பனாலும் இந்த இயக்கத்தை அசைக்கமுடியாது. இது மிகப்பெரிய ஆலமரம். 1½ கோடி தொண்டர்கள் விழுதுகளாக தாங்கி பிடித்துள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் முடிந்தபிறகு யார் காணாமல் போவார்கள் என்பது நாட்டு மக்களுக்கு தெரியும்.
முதல்-அமைச்சரும், நானும் நாட்டையே தீவைத்து கொளுத்திவிட்டோம் என்கிறார். நாங்கள் தீப்பந்தங்கள் உடனா அலைகிறோம். தீ வைத்து கொளுத்துவதற்கு?. நீங்கள்தான் மாமன், மச்சான் சண்டையில் தினகரன் பத்திரிகை அலுவலகத்தை எரித்து விட்டீர்கள். அதற்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வந்துள்ளது.
வன்முறை கலாசாரத்தை அடிப்படையாக கொண்ட இயக்கம் தி.மு.க. நாங்கள் கட்டப்பஞ்சாயத்து செய்துள்ளோமா? உங்கள் ஆட்சியில் தான் நிலஅபகரிப்பு இருந்தது. அந்த நிலத்தை நாங்கள் வந்தபிறகு மீட்டு சம்பந்தப்பட்ட மக்களிடம் கொடுத்துள்ளோம். மு.க.ஸ்டாலின் டீக்கடையில் டீ குடித்தார் என்கிறார்கள். நானும் டீக்கடை நடத்தி உள்ளேன். எனவே மு.க.ஸ்டாலின் பாச்சா நம்மிடம் பலிக்குமா? பலிக்காது. நீங்கள் எப்படி ஏமாற்றி ஆட்சிக்கு வந்தீர்கள் என்பது மக்கள் மனதை விட்டு இன்னும் அகலவில்லை.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 39 இடங்களில் போட்டியிட்டு, 37 இடங்களில் வெற்றிபெற்றோம். பின்னர் வந்த சட்டசபை தேர்தலில் 32 ஆண்டுகளுக்கு பிறகு ஆண்ட கட்சியே ஆட்சிக்கு வந்த வரலாறை படைத்துள்ளோம். எங்களை யாரும் அசைக்கமுடியாது. இப்போது 20 இடங்களை நாங்கள் எடுத்துக்கொண்டு, 19 இடங்களை கூட்டணி கட்சிகளுக்கு பகிர்ந்து கொடுத்துள்ளோம்.
எதிர்க்கட்சியினருக்கு ஒன்றை சொல்ல விரும்புகிறேன். பிரியாணி சாப்பிட்டால் காசு கொடுக்கவேண்டுமா? இல்லையா? பரோட்டா வாங்கினால் காசு கொடுக்க மறுக்கிறார்கள். வன்முறை கலாசாரத்தை தி.மு.க. இன்னும் கைவிடவில்லை. மக்களை ஏமாற்ற தவறான வார்த்தைகளை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் நாங்கள் நாட்டு மக்களுக்கு தேவை எதுவோ, அந்த திட்டங்களைதான் செயல்படுத்தி வருகிறோம்.
இந்தியா பல்வேறு மொழிகளை பேசும் மக்கள் கொண்ட மாநிலங்களை கொண்டது. பிரதமராக மோடி பொறுப்பேற்ற பிறகு வலிமையான இந்தியாவாக உருவாகி உள்ளது. 300 கி.மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை தாக்கும் ஏவுகணையை ஏவி, மிகப்பெரிய வல்லரசு நாடாக இந்தியா திகழ்கிறது. இதனால் அண்டை நாடுகள் பயப்படுகின்றன. மோடி நேர்மையான பாதையில் இந்தியாவை நடத்தி செல்கிறார். சாதி கலவரம், மத கலவரம் இங்கு இல்லை.
சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பாக இந்த அரசு திகழ்கிறது. யார் நல்லாட்சி தருகிறார்கள்? யாருடைய ஆட்சியில் நாம் நிம்மதியாக இருக்கிறோம்? என்பதை மக்கள் நன்கு அறிந்துள்ளார்கள். நாமக்கல் மாவட்டம் தமிழகத்தில் அரசியல் விழிப்புணர்வு பெற்ற மாவட்டம் ஆகும். நீங்கள் எடுக்கும் முடிவு சரியாக இருக்கும் என்ற வரலாறு உண்டு. எனவே இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து எங்களது வேட்பாளர் காளியப்பனை தமிழகத்தில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற வேட்பாளர் என்ற நிலையை உருவாக்கி தரவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த பிரசாரத்தின்போது தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி, சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா, பி.ஆர்.சுந்தரம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கே.பி.பி.பாஸ்கர், சந்திரசேகரன், பொன்.சரஸ்வதி மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள், கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்துகொண்டனர்.