இடைத்தேர்தல் நடக்கும் 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைப்பு

வேலூர் மாவட்டத்தில் இடைத்தேர்தல் நடக்கும் 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

Update: 2019-03-29 23:00 GMT
வேலூர், 

தமிழ்நாட்டில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலுடன் காலியாக இருக்கும் சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது. வேலூர் மாவட்டத்தில் சோளிங்கர், குடியாத்தம் (தனி), ஆம்பூர் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கிறது.

இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது. இந்த 3 தொகுதிகளிலும் வாக்குப்பதிவுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் நேற்று வேலூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இருந்து கலெக்டர் ராமன் முன்னிலையில் அனுப்பி வைக்கப்பட்டது.

இடைத்தேர்தல் நடக்கும் சோளிங்கர் தொகுதியில் 299 வாக்குப்பதிவு மையங்கள், குடியாத்தம் தொகுதியில் 291 வாக்குப்பதிவு மையங்கள், ஆம்பூர் தொகுதியில் 244 வாக்குப்பதிவு மையங்கள் என மொத்தம் 3 தொகுதிகளிலும் 834 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் வி.வி.பேட் கருவிகள் தனித்தனியாக அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி சோளிங்கர் தொகுதிக்கு 359 மின்னணுவாக்குப்பதிவு எந்திரங்கள், 329 கட்டுப்பாட்டு கருவிகள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் வி.வி.பேட் கருவி 359 அனுப்பி வைக்கப்பட்டது.

குடியாத்தம் தொகுதிக்கு 350 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 321 கட்டுப்பாட்டு கருவிகள், 350 வி.வி.பேட் கருவிகளும், ஆம்பூர் தொகுதிக்கு 293 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 269 கட்டுப்பாட்டு கருவிகள், 293 வி.வி.பேட் கருவிகள் பாதுகாப்பாக அனுப்பிவைக்கப்பட்டது.

அப்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ராஜ்குமார், தேர்தல் தாசில்தார் விஜயக்குமார் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்