நிலக்கோட்டையில், குடிநீர் கேட்டு ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
நிலக்கோட்டையில் குடிநீர் கேட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நிலக்கோட்டை,
நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நரியூத்து ஊராட்சியில் பாலம்பட்டி, நூத்துலாபுரம் ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் கடந்த சில தினங்களாக குடிநீர் வினியோகிக்கவில்லை என்று பொதுமக்கள் புகார் கூறி வந்தனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என கூறப்படுகிறது.
இதனால் கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று காலை பாலம்பட்டி, நூத்துலாபுரம் ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள் தங்களுக்கு குடிநீர் வழங்கக்கோரி கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை அழைத்து வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டியன் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர் களுக்கு குடிநீர் வினியோகம் முறையாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார். இதையடுத்து கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.