6-வது வகுப்பு முதல் என்.சி.சி. பயிற்சி கோரிய வழக்கு, மாணவர்கள் ஒழுக்கமாக வளர்கிறார்களா என கவனிக்க வேண்டும் - மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து
மாணவர்கள் ஒழுக்கமாக வளர்கிறார்களா என்பதை உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். கன்னியாகுமரியை சேர்ந்த ஓமர்லால், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
மதுரை,
தமிழகத்தில் தற்போது இளைஞர்களால் நடக்கும் விபத்துகளும், குற்றச்சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. பள்ளிப்பருவத்தில் மாணவர்களுக்கு உரிய ஒழுக்கத்தை கற்றுக்கொடுக்காததும் இதற்கு ஒரு காரணம். பள்ளியில் பாடங்களை மனப்பாடம் செய்வதற்கு மட்டுமே கற்றுத்தரப்படுகின்றன. இதனால் மன அழுத்தத்தில் மாணவர்கள் தற்கொலை செய்வதும், ஒழுக்கமின்றியும், கட்டுப்பாடு இல்லாத வாழ்க்கை முறையையும் அமைத்துக் கொள்கிறார்கள். இதனால் தமிழகத்தில் விபத்துகளும், குற்றச்சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.
சில வெளிநாடுகளில் இளைஞர்கள் படித்து முடித்தவுடன் 2 வருடம் ராணுவத்தில் பணிபுரிவது கட்டாயம். இதுபோல ராணுவத்தில் பணியாற்றுவதால், இளைஞர்கள் கட்டுப்பாடுகளையும், ஒழுக்கத்தையும் கற்றுக்கொள்வார்கள். நம் நாட்டில் உள்ள மாணவர்கள் அனைவரையும் ராணுவத்தில் பணியமர்த்துவது இயலாத காரியம். அதனால் குறைந்தபட்சம் 6-ம் வகுப்பு முதல் அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்களையும் தேசிய மாணவர் படையில் (என்.சி.சி.) சேர்த்து பயிற்சி அளிப்பதையும், அவர்களுக்கு நன்னெறி வகுப்புகளை நடத்துவதையும் கட்டாயமாக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஒழுக்கமும், கட்டுப்பாடும் இல்லாமல் அமைதியாக, மகிழ்ச்சியாக வாழ முடியாது. பெரியோர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது உள்பட நன்னெறிகளை மாணவர்களுக்கு கற்றுத்தர வேண்டும். அதுமட்டுமல்லாமல், மாணவர்கள் ஒழுக்கமாக வளர்கிறார்களா என்பதை உன்னிப்பாக கவனிக்க வேண்டிய தருணம் இது.
எனவே இந்த வழக்கில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையை இந்த கோர்ட்டு தாமாக முன் வந்து எதிர்மனுதாரராக சேர்க்கிறது. இந்த வழக்கு குறித்து தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை செயலாளரும் பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.