கள்ளக்காதலனை கொன்று உடலை செப்டிக் டேங்கில் வீசிய பெண் - வடலூரில் பரபரப்பு
கள்ளக்காதலனை கொலை செய்து அவரது உடலை செப்டிக் டேங்கில் பெண் ஒருவர் வீசினார். வடலூரில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
வடலூர்,
நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த தமுக்காணி முட்டம் பகுதியை சேர்ந்தவர் அய்யாப்பிள்ளை என்கிற பூராசாமி(வயது 46). கூலி தொழிலாளி. இதேபோல் அப்பாங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் பரிமளா(40) ஆவார். இவருடைய கணவர் உயிரிழந்து விட்டார்.
பரிமளாவின் கணவருக்கு அய்யாப்பிள்ளை நண்பர் என்பதன் காரணமாக பரிமளாவுக்கும், அய்யாப்பிள்ளைக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, பின்னர் இது கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலே கடந்த 13 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வந்தனர். அப்போது இவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்தநிலையில் வெளிநாட்டுக்கு கூலி வேலைக்காக சென்ற அய்யாப்பிள்ளை கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பினார். அதன் பின்னர் பரிமளாவை தேடி அவருடைய வீட்டுக்கு சென்றார். அங்கு அவர் இல்லாததால் செல்போனில் தொடர்பு கொண்டார்.
அதற்கு அவர், தான் வடலூர் ஆர்.கே. நகர் பகுதியில் தற்போது வசித்து வருவதாக தெரிவித்தார். இதையடுத்து அவர் கடந்த 9-ந்தேதி வடலூருக்கு வந்து பரிமளாவை பார்த்து பேசி சென்றார்.இதையடுத்து அய்யாப்பிள்ளை கடந்த 13-ந்தேதி, வடலூருக்கு சென்று பரிமளாவை பார்த்து வருவதாக தனது உறவினர்களிடம் கூறி விட்டு சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் வடலூர் வந்து அவரை தேடி பார்த்தனர். இருப்பினும் அவரை பற்றிய எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த அவரது அண்ணன் ராஜாராம் வடலூர் போலீசில் புகார் செய்தார். அதில், தனது தம்பி அய்யாப்பிள்ளை வடலூருக்கு பரிமளா என்பவரை பார்க்க வருவதாக எங்களிடம் கூறி விட்டு வந்தார். ஆனால் அவர் எங்கள் ஊருக்கு திரும்பி வரவில்லை. இங்கு விசாரித்தாலும் அவரை பற்றி தெரியாது என்கிறார்கள். எனவே அவரை கண்டுபிடித்து தாருங்கள் என்று கூறியிருந்தார்.
அதன்பேரில் வடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பரிமளா குறித்து விசாரித்தனர். அதில் அவர் ஆர்.கே.நகர் பகுதியில் வசித்து வருவது தெரியவந்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று அவரிடம் விசாரணை நடத்தினர். அதில், அவர் முன்னுக்கு பின் முரணான தகவலை அளித்தார். இதனால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில் அய்யாப்பிள்ளையை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.
அதாவது, கடந்த 13-ந்தேதி வீட்டுக்கு வந்த அய்யாப்பிள்ளைக்கும், பரிமளாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பரிமளா, அவரை நெட்டித் தள்ளியுள்ளார். இதில் கீழே விழுந்த அய்யாப்பிள்ளை தலையில் காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பரிமளா, அவரது உடலை என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து போய் இருந்துள்ளார். அப்போது அவர் வசித்து வரும் வீட்டிற்கு பின்னால் செப்டிக் டேங்க் ஒன்று இருந்தது. அதன் உள்ளே உடலை போட்டுவிட்டால், தான் தப்பித்து விடலாம் என்று அவர் திட்டம்போட்டார். அதன்பேரில் யாரும் இல்லாத நேரம், அவரது உடலை தூக்கி சென்று செப்டிக் டேங்கின் உள்ளே போட்டுவிட்டு ஒன்றும் தெரியாதது போல் பரிமளா இருந்துள்ளார் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து பரிமளாவின் வீட்டுக்கு சென்ற போலீசார் வீட்டின் பின்புறம் இருந்த செப்டிக் டேங்கை திறந்துபார்த்தனர். அப்போது அங்கு அய்யாப்பிள்ளையின் உடல் அழுகிய நிலையில் கிடந்தது. உடலை பேரூராட்சி தொழிலாளர்கள் மூலம் கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பரிமளாவை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அதன்பேரில் அவரிடம் மேற்கொண்டு தீவிர விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.