ஈரோடு குமலன்குட்டையில் குடிநீர் தொட்டியை உடைத்த மர்மநபர்கள்

ஈரோடு குமலன் குட்டையில் குடிநீர் தொட்டியை மர்மநபர்கள் உடைத்து உள்ளனர்.

Update: 2019-03-28 22:00 GMT
ஈரோடு, 

ஈரோடு குமலன் குட்டையில் மேல்நிலை குடிநீர் தொட்டி உள்ளது. அந்த தொட்டியில் ஏற்றப்படும் குடிநீர் சுற்றுவட்டார பகுதிகளுக்கு குழாய் மூலமாக வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், மேல்நிலை குடிநீர் தொட்டியில் தண்ணீர் ஏற்றப்படும்போது, நிறைந்து வீணாக செல்லும் தண்ணீரை சேமிக்க, தொட்டியின் கீழ் பகுதியில் பிளாஸ்டிக் தொட்டி அமைக்கப்பட்டு இருந்தது.

இந்த தொட்டியில் இருந்து குமலன்குட்டையில் உள்ள குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பிளாஸ்டிக் குடிநீர் தொட்டி உடைந்து கிடந்தது. இதைப்பார்த்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து பொதுமக்கள் சிலர் கூறியதாவது:-

பிளாஸ்டிக் தொட்டியில் இருந்து சிலம்பகவுண்டன் வீதிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அங்கு சுமார் 100 வீடுகளை சேர்ந்தவர்கள் குடிநீரை பயன்படுத்தி வருகிறார்கள். மேல்நிலை குடிநீர் தொட்டியின் சுற்றுச்சுவர் கதவு எப்போதும் பூட்டுபோட்டு மூடப்பட்டு இருக்கும். குடிநீர் ஆபரேட்டர்கள் மட்டுமே மேல்நிலை குடிநீர் தொட்டி பகுதிக்கு சென்று வருகிறார்கள். ஆனால் நேற்று முன்தினம் இரவு மர்மநபர்கள் சிலர் அத்துமீறி உள்ளே நுழைந்து உள்ளனர்.

அங்கு தண்ணீருடன் இருந்த பிளாஸ்டிக் குடிநீர் தொட்டியை உடைத்து இருக்கிறார்கள். எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், புதிய தொட்டியை மீண்டும் வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்