சாக்கிநாக்காவில் சிறுவனின் அறுவை சிகிச்சைக்கு வைத்திருந்த பணத்தை கொள்ளையடித்தவர் சிக்கினார் ரூ.5¼ லட்சம் மீட்பு

சிறுவனின் அறுவை சிகிச்சைக்கு வைத்திருந்த பணத்தை கொள்ளையடித்தவர்கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ.5¼ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.;

Update:2019-03-29 04:00 IST
மும்பை, 

சிறுவனின் அறுவை சிகிச்சைக்கு வைத்திருந்த பணத்தை கொள்ளையடித்தவர்கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ.5¼ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

மூளையில் கட்டி

மும்பை சாக்கிநாக்கா, 90 அடி ரோட்டில் உள்ள செதியா நகரை சேர்ந்தவர் அசோக்(வயது38). இவர் அதே பகுதியில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். அசோக்கின் 5 வயது மகனுக்கு மூளையில் கட்டி உள்ளது. எனவே அதற்கு அறுவை சிகிச்சை செய்ய கடந்த 3 ஆண்டுகளாக சிறிது சிறிதாக பணம் சேர்த்து வந்தார். கையில் உள்ள பணத்துடன், உறவினர்களிடமும் கடன் வாங்கி மகனுக்கு அறுவை சிகிச்சை செய்ய அசோக் முடிவு செய்தார்.

எனவே அவர் சம்பவத்தன்று சொந்த ஊரில் உள்ள உறவினர்களிடம் பணம் வாங்க மனைவி, மகனுடன் குஜராத் சென்றார்.

கொள்ளை

இந்தநிலையில் அன்று இரவு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையன் ஒருவன் அங்கு இருந்த ரூ.9 லட்சம் மதிப்பிலான நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றான். வீட்டில் கொள்ளை நடந்தது குறித்து குஜராத் சென்று இருந்த அசோக்கிடம் பக்கத்து வீட்டுக்காரர்கள் தகவல் கொடுத்தனர்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் மனைவி, மகனை அங்கு விட்டுவிட்டு உடனடியாக மும்பை திரும்பி வந்தார். பின்னர் அவர் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார்.

உத்தரபிரதேசத்தில் கைது

இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, இஸ்மாயில் சேக்(34) என்பவர் அசோக்கின் வீட்டுக்குள் நுழைந்து கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. மேலும் அவர் உத்தரபிரதேசத்தில் பதுங்கி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அங்கு சென்ற மும்பை போலீசார் உள்ளூர் போலீசார் உதவியுடன் இஸ்மாயில் சேக்கை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ.5 லட்சத்து 30 ஆயிரம் ரொக்கம், ரூ.70 ஆயிரம் மதிப்பிலான தங்கநகைகள், செல்போன் ஆகியவற்றை மீட்டனர். மீதமுள்ள பணத்தை பறிமுதல் செய்ய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்