கர்நாடகத்தில் மந்திரி சி.எஸ்.புட்டராஜு வீடு உள்பட 15 இடங்களில் வருமானவரி சோதனை கண்டனம் தெரிவித்து குமாரசாமி - காங். தலைவர்கள் தர்ணா
கர்நாடகத்தில் மந்திரி சி.எஸ்.புட்டராஜு வீடு உள்பட 15 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினார்கள்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் நாடாளுமன்ற தேர்தல் 2 கட்டங்களாக ஏப்ரல் 18, 23-ந் தேதிகளில் நடக்கிறது.
வருமான வரி சோதனை
முதல்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது. மனுக்களை வாபஸ் பெற இன்று(வெள்ளிக்கிழமை) கடைசி நாள் ஆகும். இதனால் தேர்தல் பிரசாரம் தீவிரம் அடைந்துள்ளது.
இந்த நிலையில் முதல்-மந்திரி குமாரசாமி, நேற்று முன்தினம் மண்டியாவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “வருமான வரித்துறை அதிகாரிகள் கர்நாடகத்தில் நாளை(அதாவது நேற்று) பெரிய அளவில் எங்கள் கட்சி தலைவர் களின் வீடுகளில் சோதனை நடத்த திட்டமிட்டுள்ளனர்” என்று பரபரப்பு தகவலை வெளியிட்டார்.
மந்திரி சி.எஸ்.புட்டராஜு
அவர் கூறியபடியே கர்நாடகத்தில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனைகளில் ஈடுபட்டனர். நேற்று அதிகாலை 5.30 மணியளவில் 4 அதிகாரிகள் கொண்ட குழு, மண்டியா மாவட்டம் பாண்டவபுரா தாலுகாவில் உள்ள சின்ன குருளி கிராமத்தில் உள்ள கர்நாடக சிறிய நீர்ப்பாசனத்துறை மந்திரி சி.எஸ்.புட்டராஜு வீட்டில் சோதனை நடத்தினர்.
மைசூருவில் உள்ள அவரது சகோதரரின் மகன்கள் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும் ஹாசனில் பொதுப்பணித்துறை மந்திரி எச்.டி.ரேவண்ணாவின் நெருங்கிய ஒப்பந்ததாரர்களின் வீடுகளிலும் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர்.
15 இடங்களில்...
அதேபோல் சிக்கமகளூருவில் ஒரு என்ஜினீயர் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகா அலுவலகத்தில் 3 அதிகாரிகள் கொண்ட குழுவினர், நில ஆவணங்களை ஆய்வு செய்தனர். மந்திரி டி.கே.சிவக்குமார் மற்றும் டி.கே.சுரேஷ் எம்.பி. ஆகியோருக்கு சொந்தமான நிலங்கள் குறித்து அவர்கள் சில முக்கியமான ஆவணங்களை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
அதுபோல் மந்திரி புட்டராஜு வீடு, உறவினர்கள் வீடுகளில் நடந்த சோதனைகளில் சில முக்கியமான ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இந்த சோதனைகளின்போது, மத்திய போலீசார் மட்டுமே பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மாநில போலீசாரை வருமான வரித்துறை அதிகாரிகள் பயன்படுத்தவில்லை. கர்நாடகத்தில் நேற்று மட்டும் 15 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.
மிகவும் வருந்தத்தக்கது
இந்த சோதனைக்கு கண்டனம் தெரிவித்து முதல்-மந்திரி குமாரசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார்.
அதில், “பிரதமர் மோடியின் உண்மையான துல்லிய தாக்குதல் (சர்ஜிக்கல் ஸ்டிரைக்) இந்த வருமான வரி சோதனை மூலம் பகிரங்கமாகியுள்ளது. வருமான வரித்துறை அதிகாரி பாலகிருஷ்ணனுக்கு அரசியலமைப்பு பதவி வழங்குவதாக பிரதமர் உறுதியளித்து, அதன் மூலம் எதிர்க்கட்சி தலைவர்களை பழிவாங்குகிறார். தேர்தல் நேரத்தில் அரசு எந்திரம், ஊழல் அதிகாரிகளை பயன் படுத்தி எதிர்க்கட்சிகளை துன்புறுத்துவது என்பது மிகவும் வருந்தத்தக்கது” என்று குறிப்பிட்டு உள்ளார்.
மத்திய போலீஸ் பாதுகாப்பு படை
வருமான வரி சோதனை குறித்து மந்திரி சி.எஸ்.புட்டராஜு மண்டியாவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
வருமான வரித்துறை அதிகாரிகள் அடங்கிய 3 குழுவினர் எனது வீட்டில் சோதனை நடத்தினர். மத்திய போலீஸ் பாதுகாப்பு படையை சேர்ந்த 8 பேர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.இந்த வருமான வரி சோதனையின் பின்னணியில் 100 சதவீதம் பா.ஜனதா உள்ளது. பா.ஜனதா ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளரும் (சுமலதா) இதற்கு காரணம். நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. சட்ட விரோதமாக பணமும் சேர்க்கவில்லை.
எதிர்க்கட்சிகளை மிரட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் பா.ஜனதா அரசு, இந்த செயல்களில் ஈடுபடுகிறது. இதற்கெல்லாம் நாங்கள் பயப்படமாட்டோம். இந்த தேர்தலில் நாங்கள் இன்னும் ஊக்கமாக பணியாற்ற இந்த சோதனை எங்களுக்கு உதவும்.
இந்த சோதனை எனக்குள் இருக்கும் நம்பிக்கையை அதிகப்படுத்தி உள்ளது. கர்நாடகத்தில் எதிர்க்கட்சி தலைவர்களின் வீடுகளை மட்டுமே குறி வைத்து வருமான வரித்துறை சோதனை நடத்துகிறது. பா.ஜனதாவினரின் வீடுகளில் சோதனை நடத்தாதது ஏன்?.
இவ்வாறு சி.எஸ்.புட்டராஜு கூறினார்.
பா.ஜனதாவின் கைப்பாவை
இதுகுறித்து பொதுப்பணித்துறை மந்திரி எச்.டி.ரேவண்ணா ஹாசனில் நிருபர்களிடம் கூறுகையில், “வருமான வரித்துறை அதிகாரிகள், பா.ஜனதாவின் கைப்பாவையாக செயல்படுகிறார்கள்.
பழிவாங்கும் அரசியலில் மோடி ஈடுபடுகிறார். தேவேகவுடா மீது மோடி கை வைத்துள்ளார். அரசியலில் அவரது முடிவுக்கான தொடக்கம் தொடங்கிவிட்டது. இதற்கெல்லாம் நாங்கள் பயப்படமாட்டோம்” என்றார்.
குமாரசாமி தர்ணா
இந்த வருமான வரி சோதனை எதிர்க்கட்சிகளை மிரட்டும் செயல் என கண்டித்து, முதல்-மந்திரி குமாரசாமி, துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் உள்ளிட்டோர் பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் உள்ள வருமான வரித்துறை அலுவலகம் முன்பு நேற்று திடீர் தர்ணா போராட்டம் நடத்தினர்.
இதில் மந்திரிகள் சா.ரா.மகேஷ், சி.எஸ்.புட்டராஜு, டி.சி.தம்மண்ணா உள்பட பல்வேறு மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள், காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு, மத்திய அரசு மற்றும் வருமான வரித்துறைக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மத்திய அரசை கண்டித்து முதல்-மந்திரியே போராட்டம் நடத்தியதால் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அரசியலமைப்பு சட்ட சிக்கல் ஏற்படும் நிலையும் உருவாகியுள்ளது.