சங்ககிரி அருகே வாகன சோதனையில் ரூ.8 லட்சம் சேலைகள் பறிமுதல்
சங்ககிரி அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ.8 லட்சம் மதிப்பிலான சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சங்ககிரி,
சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே ஜலகண்டாபுரம்-இளம்பிள்ளை இடையே பாப்பம்பாடி பிரிவு சாலையில், சேலம் ஆவின் ஆய்வாளர் செல்வக்குமார் தலைமையிலான பறக்கும் படையினர் நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு வேனில், 27 பண்டல்களில் ரூ.8 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான 1,620 காட்டன் மற்றும் பாலியஸ்டர் சேலைகள் இருந்தன.
அந்த சரக்கு வேன் டிரைவரான இளம்பிள்ளையை சேர்ந்த பூபதி (வயது 25), ஜலகண்டாபுரத்தில் இருந்து பெருமாகவுண்டன்பட்டியில் உள்ள சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான குடோனுக்கு அந்த சேலை பண்டல்களை கொண்டு செல்வதாக பறக்கும் படை அதிகாரிகளிடம் கூறினார்.
ஆனால் அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த சேலை பண்டல்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் அமிர்தலிங்கத்திடம் ஒப்படைத்தனர்.
மேச்சேரி அருகே உள்ள அமரன்திட்டு பகுதியில், வட்டார வளர்ச்சி அலுவலர் சென்னகிருஷ்ணன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனர். அந்த காரில் பெங்களூருவை சேர்ந்த அபி பாட்ஷா என்பவர் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.70 ஆயிரம் எடுத்து வந்துள்ளார். இதையடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், மேட்டூர் உதவி கலெக்டர் லலிதாவிடம் ஒப்படைத்தனர்.