தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க புதிய செயலி
நாடாளுமன்ற தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.;
சிவகங்கை,
சிவகங்கையில் உள்ள மாற்றுத்திறனாளி அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் வாக்களிப்பது தொடர்பாகவும், வாக்களிப்பதின் அவசியம் குறித்தும் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் வாக்குப்பதிவு எந்திரத்தின் செயல்பாடு மற்றும் தேர்தல் விழிப்புணர்வு நடத்தப்பட்டது.
மேலும் இதுகுறித்த விழிப்புணர்வு ஊர்வலம் சிவகங்கை உதவி தேர்தல் அலுவலர் தலைமையில் நடந்தது. சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் செல்வகுமாரி தலைமை தாங்கினார். மாற்றுத்திறனாளி அலுவலர் சரவணகுமார் முன்னிலை வகித்தார். இதில் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் கருணாகரன், சமூகப்பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் பாலகிருஷ்ணன், தேர்தல் துணை தாசில்தார்கள் தர்மராஜ், சேகர் மற்றும் தேர்தல் உதவியாளர் மலைச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், வாக்குப்பதிவு எந்திரத்தின் செயல்பாடு குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது. வாக்குப்பதிவு எந்திரத்தில் பார்வையற்ற, காது கேளாதோர் மற்றும் இதர மாற்றுத் திறனாளிகள் எளிதாக எவ்வாறு வாக்களிக்கலாம் என்பதையும், வாக்குச் சாவடியில் மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ள வசதிகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்தியத் தேர்தல் ஆணையத்தால் மாற்றுத்திறனாளிகள் தேர்தலில் எளிதில் வாக்களிக்கக் கூடிய வகையில் பி.டபிள்யூ.டி. என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதை கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து அதன் மூலம் வாக்காளர் பட்டியலில் மாற்றுத்திறனாளிகள் என பதிவு செய்யவும், புதிதாக வாக்காளர் சேர்க்கை, முகவரி மாற்றம் உள்ளிட்ட, திருத்தங்கள் செய்ய பதிவு செய்யலாம்.
வாக்குச்சாவடி மையம் அமைந்துள்ள இடம், வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் பற்றியும், வாக்குச் சாவடிக்கு செல்ல சக்கர நாற்காலி வாகனம் பதிவு போன்றவற்றை தங்களிடம் உள்ள கைப்பேசி மூலமாகவே அனைத்தையும் செய்து கொள்ளலாம் என விளக்கி கூறப்பட்டது.