இலங்கை தலைமன்னார்-தனுஷ்கோடி இடையே கடலில் 28 கிலோ மீட்டர் தூரத்தை நீந்தி தேனி சிறுவன் உலக சாதனை 10½ மணி நேரத்தில் இலக்கை எட்டினான்; குவியும் பாராட்டுகள்

தலைமன்னார்-தனுஷ்கோடி இடையே கடலில் 28 கிலோ மீட்டர் தூரத்தை 10½ மணி நேரத்தில் நீந்தி கடந்து தேனி சிறுவன் புதிய சாதனை படைத்தான். அவருக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேரில் வாழ்த்து தெரிவித்தார்.

Update: 2019-03-28 21:45 GMT
ராமேசுவரம்,

தேனி மாவட்டம் அல்லிநகரத்தை சேர்ந்த தம்பதி ரவிக்குமார்-தாரணி. இவர்களுடைய மகன் ஜெய் ஜஸ்வந்த் (வயது 10). தேனியில் உள்ள தனியார் பள்ளிக்கூடம் ஒன்றில் 4-ம் வகுப்பு படித்து வருகிறான். நீச்சலில் பல சாதனைகளை படைத்துவரும் இவன், இலங்கை தலைமன்னாரில் இருந்து ராமேசுவரம் தனுஷ்கோடி வரை 28 கிலோ மீட்டர் தூரத்தை கடலில் நீச்சல் அடித்து கடக்கும் சாதனையை நிகழ்த்தி உள்ளான்.

அதற்காக ராமேசுவரம் துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் மாலை சிறுவன் ஜெய் ஜஸ்வந்த், அவருடைய தந்தை ரவிக்குமார், பயிற்சியாளர் விஜய்குமார், ஒருங்கிணைப்பாளர் ரோஜர் உள்பட 14 பேர் கொண்ட குழுவினர் ஒரு மீன்பிடி விசைப்படகு மூலமாக இலங்கை தலைமன்னாருக்கு சென்றனர்.

பின்னர் இலங்கை தலைமன்னார் ஊர்மலை என்ற பகுதியில் இருந்து சரியாக நேற்று அதிகாலை 4 மணிக்கு ஜெய் ஜஸ்வந்த் கடலில் நீந்த தொடங்கினான். இந்திய கடல் எல்லையை காலை 9.45 மணிக்கு கடந்த அவன், அங்கிருந்து தொடர்ந்து நீச்சல் அடித்து பகல் 2.30 மணிக்கு தனுஷ்கோடி அரிச்சல்முனை கரையை வந்தடைந்தான்.

28 கிலோமீட்டர் தூரத்தை சரியாக 10 மணி 30 நிமிட நேரத்தில் கடந்து உலக சாதனை புரிந்துள்ள சிறுவன் ஜெய் ஜஸ்வந்தை அவருடைய பெற்றோர் ரவிக்குமார், தாரணி மற்றும் உறவினர்கள் முத்தமிட்டு வரவேற்றனர்.

தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையிலும் சிறு வயதில் நீச்சலில் புதிய சாதனை புரிந்த சிறுவன் ஜெய் ஜஸ்வந்தை தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு நேரில் வந்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு, கடலோர போலீஸ் ஏ.டி.எஸ்.பி. இளங்கோ, இன்ஸ்பெக்டர் பெலிக்ஸ் சுரேஷ், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜ்குமார், கணேசமூர்த்தி மற்றும் கடற்படை அதிகாரிகள், மத்திய-மாநில புலனாய்வு பிரிவுஅதிகாரிகள், சுற்றுலா பயணிகள் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றனர். அப்போது அந்த சிறுவனுடன் ஏராளமான சுற்றுலா பயணிகள் நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

சாதனை படைத்த சிறுவன் ஜெய் ஜஸ்வந்துக்கு பாராட்டு குவிந்து வருகிறது. இதுதொடர்பாக அவன் கூறியதாவது:-

தலைமன்னார் பகுதியில் இருந்து அதிகாலை 4 மணிக்கு நீச்சல் அடிக்க தொடங்கினேன். குற்றாலீசுவரன் சாதனையை முறியடித்து 10½ மணி நேரத்தில் நீந்தி தனுஷ்கோடி வந்தடைந்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த சாதனைக்கு உறுதுணையாக இருந்த பயிற்சியாளர், பெற்றோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன்.

இன்னும் 3 ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ்கோடி கடல் பகுதியில் இருந்து நீந்தியபடி தலைமன்னார் சென்று விட்டு மீண்டும் தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையிலும் நீந்திவர திட்டமிட்டுள்ளேன்.

இவ்வாறு அவன் கூறினான்.

நீச்சல் பயிற்சியாளர் விஜய்குமார் கூறும் போது, “ஜெய்ஜஸ்வந்த் தலைமன்னாரில் இருந்து நீந்த தொடங்கியதில் இருந்தே கடல் அலைகளின் வேகமும், காற்றின் வேகமும் மிகவும் குறைவாகவே இருந்ததால் அவன் நீந்துவதற்கு சுலபமாக இருந்தது. இந்திய கடல்எல்லை வரை வேகமாக நீந்தினான். இந்திய கடல் எல்லையில் இருந்து தனுஷ்கோடி வரை நீந்தும் போது தான் கடல் நீரோட்டம் வேகமாக இருந்ததால் நீந்தி வர சிறிது சிரமப்பட்டான். இதே தலைமன்னார்-தனுஷ்கோடி இடையே கடந்த 1994-ம் ஆண்டில் 12 வயதில் குற்றாலீசுவரன், 16 மணி நேரத்தில் நீந்தி கடந்து சாதனை புரிந்துள்ளார். அதன்பின் பலர் இவ்வாறு நீந்தி கடந்திருந்தாலும் மிகவும் குறைந்த வயதில் 10½ மணி நேரத்தில் கடந்து சிறுவன் ஜெய்ஜஸ்வந்த் உலக சாதனை புரிந்துள்ளார்” என்று கூறினார்.

மேலும் செய்திகள்