திசையன்விளை, கூடங்குளத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ் பாண்டியன் தீவிர வாக்கு சேகரிப்பு
திசையன்விளை, கூடங்குளத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ் பாண்டியன் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார்.
திசையன்விளை,
திசையன்விளை, கூடங்குளத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ் பாண்டியன் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார்.
வாக்கு சேகரிப்பு
நெல்லை நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் மனோஜ் பாண்டியன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர் நேற்று திசையன்விளை சுற்றுவட்டாரத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். முன்னதாக காலையில் திசையன்விளை அருகே உள்ள முதுமொத்தன்மொழி கிராமத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு அவர் மாலை அணிவித்து பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து ஆனைகுடி, கால்டுவெல்புரம், இடையன்குடி, அருள்நகர், மிக்கேல்நகர், ஜார்ஜ் நகர், க.உவரி, உவரி, காரிகோயில், செம்பொன்விளை, குட்டம், குஞ்சன்விளை, கூடுதாழை, மரக்காட்டுவிளை, கோடாவிளை, நவ்வலடி, ராமன்குடி, தத்துவநேரி, வல்லான்விளை, ஆற்றங்கரைபள்ளிவாசல் உள்பட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கொளுத்தும் வெயிலிலும் வீதி வீதியாக சென்று அவர் வாக்கு சேகரித்தார். அவருக்கு வழிநெடுகிலும் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், மேளதாளங்கள் முழங்கவும் வரவேற்பு கொடுத்து அழைத்து சென்றனர்.
முழு ஆதரவு
பிரசாரத்தின் போது மனோஜ் பாண்டியன் பேசியதாவது:-
நெல்லை தொகுதியில் கூட்டணி கட்சிகள் சார்பில் அ.தி.மு.க. வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள எனக்கு அனைவரும் முழு ஆதரவு கொடுக்க வேண்டும். இந்த தொகுதிக்கு பல நல்ல திட்டங்கள் வந்து சேரவும், மத்தியில் மீண்டும் பா.ஜனதா ஆட்சி அமையவும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை அமோக வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்றார்.
அவருடன் இன்பதுரை எம்.எல்.ஏ., மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் கே.பி.கே. செல்வராஜ், ஒன்றிய செயலாளர் அந்தோணி அமலராஜா, மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் ஏ.கே.சீனிவாசன், பா.ஜனதா மாநில மகளிரணி செயலாளர் கனிஅமுதா, ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெயக்குமார், தொடக்க கூட்டுறவு சங்க தலைவர் பாலன், நெல்லை கிழக்கு மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் வக்கீல் ஜெயபாலன், முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் நாராயண பெருமாள், முன்னாள் எம்.பி. சவுந்தரராஜன், நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெயக்குமார், அரசு வக்கீல் பழனிசங்கர், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் பால்துரை, ஒன்றிய இளைஞரணி முருகேசன், அவைத்தலைவர் சண்முகநாதன், பா.ஜனதா கூட்டுறவு அணி சேர்மத்துரை உள்பட கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
கூடங்குளம்
தொடர்ந்து மாலையில் கூடங்குளத்தில் மனோஜ் பாண்டியன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில்,
அ.தி.மு.க. வலிமையான கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுகிறது. இந்த தேர்தல் ஒன்றிய கவுன்சிலருக்கோ, சட்டமன்றத்துக்கோ நடக்கும் தேர்தல் அல்ல. நாடாளுமன்றத்துக்கு நடைபெறும் தேர்தல். உங்கள் குரலை டெல்லியில் ஒலிக்கச்செய்ய என்னை தேர்வுசெய்து அனுப்புங்கள். என்னை தேர்வு செய்தால் உங்கள் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவேன் என்றார்.