திருச்சி விமான நிலையத்தில் ரூ.15 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சியில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளில் சிலர் தங்கம், மின்னணு சாதனங்கள் போன்றவற்றை கடத்தி வரும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது.

Update: 2019-03-28 22:45 GMT
செம்பட்டு,

திருச்சியில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளில் சிலர் தங்கம், மின்னணு சாதனங்கள் போன்றவற்றை கடத்தி வரும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. இதை தடுக்க மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள், பயணிகள் மற்றும் அவர்களுடைய உடைமைகளை சோதனை செய்து, கடத்தி வரப்படும் பொருட்களை பறிமுதல் செய்வார்கள்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் திருச்சிக்கு வந்த பயணிகளின் உடைமைகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, இலங்கையை சேர்ந்த சவரிமுத்து அந்தோணி செபாஸ்டின் என்பவர் தனது உடலில் மறைத்து ரூ.15 லட்சம் மதிப்பிலான 464 கிராம் தங்க கட்டிகளை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அந்த தங்க கட்டிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கடந்த 5 நாட்களில் மட்டும் திருச்சி விமான நிலையத்தில் 2 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்