ஒகேனக்கல் நீரேற்று நிலையத்தில் பிடிபட்ட சிறுத்தைகுட்டி வனப்பகுதியில் விடப்பட்டது
ஒகேனக்கல் நீரேற்று நிலையத்தில் பிடிபட்ட சிறுத்தை குட்டி வனப்பகுதியில் விடப்பட்டது.
பென்னாகரம்,
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதியில் யானை, சிறுத்தை குட்டி, மான் உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. வனப்பகுதியில் தற்போது கடும் வறட்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக வனப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி யானை, மான் உள்ளிட்ட வன விலங்குகள் ஊருக்குள் புகுந்து விடுகிறது.
இதேபோல் கடந்த 24-ந் தேதி இரவு ஒகேனக்கல் நீரேற்று நிலையத்திற்குள் தண்ணீர் தேடி சிறுத்தை குட்டி புகுந்தது. ஆனால் அந்த சிறுத்தை குட்டியை, நாய் என நினைத்து குடிநீர் திட்ட பணியாளர்கள் விரட்ட முயன்றனர். பின்னர் அருகில் சென்று பார்த்த போது அது நாய் குட்டி இல்லை என்பதும், சிறுத்தை குட்டி எனவும் தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த குடிநீர் திட்ட பணியாளர்கள் ஒகேனக்கல் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் வனத்துறையினர் விரைந்து சென்று அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
ஒகேனக்கல் வனச்சரகர் கேசவன், பென்னாகரம் வனச்சரகர் குணசேகரன் மற்றும் வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் நீரேற்று நிலைய பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு வந்த சிறுத்தை குட்டி கழிவு நீர் தொட்டியில் புகுந்தது. இதையடுத்து தொட்டியில் தண்ணீரை நிரப்பி சிறுத்தை குட்டி மேலே வரச் செய்து வலை விரித்து பிடித்தனர்.
பின்னர் சிறுத்தை குட்டியை கூண்டில் அடைத்தனர். இதையடுத்து வனப்பகுதியில் கொண்டு விட நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக சிறுத்தை குட்டி அடைக்கப்பட்ட கூண்டை ஒரு வேனில் ஏற்றினர். மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் உத்தரவின் பேரில் நேற்று முன்தினம் இரவு ஒகேனக்கல் முசல்மடுவு வனப்பகுதியில் கொண்டு சென்று சிறுத்தை குட்டியை விட்டனர். அப்போது கூண்டில் இருந்து சிறுத்தை குட்டி பாய்ந்து வெளியேறி காட்டுக்குள் ஓடியது.