அத்திப்பள்ளி அருகே லாரிகள் மோதல்; 4 பேர் உடல் நசுங்கி சாவு
அத்திப்பள்ளி அருகே லாரிகள் நேருக்குநேர் மோதிய விபத்தில் 4 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஓசூர்,
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து அத்திப்பள்ளி நோக்கி நேற்று காலை லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த லாரியில் வட மாநிலத்தை சேர்ந்த சிலர் பயணம் செய்தனர். கூலி வேலைக்காக அவர்கள் சென்று கொண்டிருந்தனர். அத்திப்பள்ளி அருகே ஆனேக்கல் அடுத்த திருமகொண்டஹள்ளி என்ற இடத்தில் சென்ற போது திடீரென லாரியின் டயர் வெடித்தது. இதில் லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. மேலும் சாலையில் இருந்த தடுப்பு சுவரை உடைத்து கொண்டு சாலையின் மறுபுறத்துக்கு லாரி சென்றது. அப்போது எதிரே வந்த மினிலாரியும், இந்த லாரியும் நேருக்குநேர் பயங்கரமாக மோதின.
இந்த விபத்தில் லாரியில் இருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பரமேஷ் (வயது 28), சச்சி (24) மற்றும் ஒருவர் என 3 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் எதிரே மினிலாரியில் வந்த 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே மேலும் ஒருவர் பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சூர்யாநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெங்களூரு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்துக்குள்ளான லாரிகளை அங்கிருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அத்திப்பள்ளி அருகே லாரிகள் நேருக்குநேர் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.