பா.ஜனதா-அ.தி.மு.க. ஆட்சியில் “மக்கள் சந்தித்த துயரங்களுக்கு முடிவுகட்ட உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள்” கனிமொழி எம்.பி. பிரசாரம்

“பா.ஜனதா-அ.தி.மு.க. ஆட்சியில் மக்கள் சந்தித்த துயரங்களுக்கு முடிவுகட்ட உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள்“ என்று தேர்தல் பிரசாரத்தில் கனிமொழி எம்.பி. கூறினார்.

Update: 2019-03-28 22:30 GMT
கோவில்பட்டி,

“பா.ஜனதா-அ.தி.மு.க. ஆட்சியில் மக்கள் சந்தித்த துயரங்களுக்கு முடிவுகட்ட உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள்“ என்று தேர்தல் பிரசாரத்தில் கனிமொழி எம்.பி. கூறினார்.

கனிமொழி எம்.பி. பிரசாரம்

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி எம்.பி. நேற்று மாலையில் கோவில்பட்டி அன்னை தெரசா நகரில் திறந்த வேனில் சென்று தனது பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து அவர் மந்திதோப்பு, கரிசல்குளம், சிவந்திபட்டி, துறையூர், ராஜீவ்நகர், முத்துநகர், வடக்கு திட்டங்குளம், லாயல்மில் காலனி, தாமஸ் நகர், கூசாலிபட்டி, லிங்கம்பட்டி, குலசேகரபுரம் ஆகிய பகுதிகளிலும் சென்று வாக்கு சேகரித்தார்.

பிரசாரத்தின்போது கனிமொழி எம்.பி. கூறியதாவது:-

மக்கள் சந்தித்த துயரங்கள்

கடந்த 5 ஆண்டுகளாக மத்திய பா.ஜனதா ஆட்சியில் பொதுமக்கள் சந்தித்த துயரங்கள் ஏராளம். சரக்கு சேவை வரி விதித்ததால் தீப்பெட்டி, பட்டாசு, கடலை மிட்டாய் உள்ளிட்ட அனைத்து தொழில்களும் நலிவடைந்து, எண்ணற்ற தொழிலாளர்கள் வேலை இழந்தனர். விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யாததால், ஆண்டுதோறும் 21 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு, ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவதாக கூறியவர்கள், தற்போது தேசிய ஊரக தொழிலாளர்களின் சம்பளத்தை கூட அவர்களது வங்கி கணக்கில் முறையாக வரவு வைப்பது இல்லை.

விலைவாசி உயர்வு

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் ரூ.300-ஆக இருந்த சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை தற்போது ரூ.1,000-ஐ தாண்டி விட்டது. மேலும் பெரும்பாலானவர்களுக்கு கியாஸ் மானியம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுவதே இல்லை. பெட்ரோல், டீசல் விலையையும் வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தி விட்டு, தற்போது தேர்தலுக்காக சற்று குறைத்துள்ளனர். விலைவாசி உயர்வால் ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

நியாயத்துக்காக போராடுகிறவர்களை சுட்டு கொல்வதற்கு தயங்காதவர்களின் ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும். மத்திய பா.ஜனதா அரசின் கைப்பாவையாக அ.தி.மு.க. அரசு உள்ளது. வருகிற தேர்தலில் இந்த 2 அரசுகளுக்கும் முடிவு கட்ட வேண்டும். மத்தியில் தமிழர்களையும், தமிழர்களின் உணர்வுகள், அடையாளங்களை மதிக்கின்ற அரசு அமைய வேண்டும்.

உதயசூரியன் சின்னத்தில்...

ஏழை மாணவர்கள் மருத்துவ கல்வி பயில நீட் தேர்வை ரத்து செய்கின்ற அரசு அமைய வேண்டும். மக்களுக்கு பயன்படக்கூடிய வேலைவாய்ப்புகளை தரக்கூடிய அரசு அமைய வேண்டும். மத்தியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையிலும், தமிழகத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலும் நல்லாட்சி அமைவதற்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள்.

தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் விவசாய கடன், கல்விக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு வட்டியில்லாத கடனாக ரூ.50 ஆயிரம் வழங்கப்படும். 10-ம் வகுப்பு படித்த ஒரு கோடி இளைஞர்களுக்கு சாலை பணியாளர் பணி வழங்கப்படும். பா.ஜனதா, அ.தி.மு.க. ஆட்சியில் மக்கள் சந்தித்த துயரங்களுக்கு முடிவு கட்ட உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள்.

இவ்வாறு கனிமொழி எம்.பி. கூறினார்.

அப்போது வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ., மாநில செய்தி தொடர்பாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

செயல்வீரர்கள் கூட்டம்

தூத்துக்குடி கலைஞர் அரங்கில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் மீராசா தலைமை தாங்கினார். தி.மு.க. வேட்பாளர் கனிமொழி எம்.பி, வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் மகமதுல்ஹசன் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் முகமது அபுபக்கர் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் கட்சியினர் கலந்து கொண்டனர்.

பின்னர் கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறும்போது, “பா.ஜனதாவினர் கடந்த 5 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து விட்டு தேர்தல் வந்தவுடன் அவசரமாக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினர். தேர்தலுக்காக செய்யக்கூடிய ஒரு காட்சிதான் இது. நிச்சயமாக எய்ம்ஸ் வரும். ஆனால் பா.ஜனதா ஆட்சி அகற்றப்பட்டு எங்களுடைய கூட்டணி ஆட்சியில் தான் எய்ம்ஸ் தமிழ்நாட்டுக்கு வரும்” என்றார்.

மேலும் செய்திகள்