தமிழகத்தில் எந்த காலத்திலும் தி.மு.க. ஆட்சிக்கு வர முடியாது துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

தமிழகத்தில் எந்த காலத்திலும் தி.மு.க. ஆட்சிக்கு வர முடியாது என்று, திருவாரூரில் துணை முதல் - அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

Update: 2019-03-28 23:15 GMT
திருவாரூர்,

நாகை நாடாளுமன்ற அ.தி.மு.க. வேட்பாளர் சரவணன், திருவாரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஜீவானந்தம் ஆகியோரை ஆதரித்து

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று திருவாரூரில் வேனில் பிரசாரம் மேற்கொண்டார். முன்னதாக மயிலாடுதுறையில் இருந்து திருவாரூருக்கு வந்த அவர் ஆழித்தேரோட்ட விழாவையொட்டி தேரில் எழுந்தருளிய தியாகராஜர் சாமியை வணங்கினார்.

மாலை திருவாரூர் பழைய பஸ் நிலையம் ரவுண்டாவில் வேனில் இருந்து தனது பிரசாரத்தை ஓ.பன்னீர்செல்வம் தொடங்கினார். அவருடன் அமைச்சர் ஆர்.காமராஜ், நாகை நாடாளுமன்ற வேட்பாளர் சரவணன், திருவாரூர் சட்டமன்ற வேட்பாளர் ஜீவானந்தம் ஆகியோர் இருந்தனர்.

அப்போது ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

அ.தி.மு.க. தர்மத்தின் பக்கம் நின்று எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் ஆட்சி செய்து வருகிறது. நாங்கள் மக்கள் வளர்ச்சியை பற்றி சிந்திக்கும் வெற்றி கூட்டணியை அமைத்துள்ளோம். காங்கிரஸ்-தி.மு.க. அமைத்துள்ள கூட்டணி அதர்ம கூட்டணி. தமிழகத்தில் ஜீவதார உரிமைகள் பறி போகும் நேரத்தில், அதை காப்பாற்ற பாடுபட்டது அ.தி.மு.க. தான். தஞ்சை தரணி அனைவருக்கும் உணவு அளித்து வருகிறது.

காவிரியில் தமிழகத்தின் பங்கை விட்டு கொடுத்தது தி.மு.க. தான். இதனால் கர்நாடகாவில் பல அணைகள் கட்டப்பட்டு, தமிழகத்துக்கு சரிவர தண்ணீர் வரவில்லை. இந்தநிலையில் காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை மத்திய அரசு இதழில் வெளியிட வேண்டும் என ஜெயலலிதா, அப்போது ஆட்சி செய்த தி.மு.க.விடம் வலியுறுத்தினார். ஆனால் தி.மு.க. எதுவும் செய்யவில்லை. பின்னர் அ.தி.மு.க. ஆட்சி பொறுப்பு ஏற்றபின் சட்ட போராட்டம் நடத்தி 2013-ம் ஆண்டு காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை மத்திய அரசு இதழில் வெளியிட செய்தார்.

காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்று குழு ஏற்படுத்தியது ஜெயலலிதா தான். விலையில்லா அரிசி மூலம் உணவு பாதுகாப்பை தந்தார். 2023-ம் ஆண்டு தொலை நோக்கு திட்டமாக குடிசை வீடுகளில் வசிக்கும் 15 லட்சம் பேருக்கு கான்கீரிட் வீடுகள் கட்டி தரப்படும் என ஜெயலலிதா அறிவித்தார். இதுவரை 6 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. நிச்சயம் 2023-ம் ஆண்டுகள் இந்த திட்டம் முற்றிலும் நிறைவு பெற்று குடிசைகளற்ற நிலை உருவாகும். .

வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை பொறுக்க முடியாமல் மு.க.ஸ்டாலின் கோர்ட்டுக்கு சென்றார். நிச்சயமாக உச்சநீதிமன்றம் மூலம் நீதியை பெற்று அனைவருக்கும் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். தமிழகத்தில் எந்த காலத்திலும் தி.மு.க. ஆட்சிக்கு வர முடியாது.

மக்களின் தேவைகளை நிறைவேற்ற அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்