ஒரப்பம் வாரச்சந்தையில் வாக்களிக்கும் எந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கம்
ஒரப்பம் வாரச்சந்தையில் வாக்களிக்கும் எந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்களுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.;
பர்கூர்,
தமிழகத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலின் போது 100 சதவீதம் வாக்களிக்க செய்ய வேண்டும் என்ற நோக்கில் இந்திய தேர்தல் ஆணையம் பொதுமக்களிடையே பல்வேறு வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிகம் மக்கள் கூடும் இடங்களில் வாக்குப்பதிவு எந்திரம், அத்துடன் வாக்குகளை சரி பார்க்கும் எந்திரங்கள் வைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு செயல்விளக்கத்துடன் விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, பர்கூர் அருகே உள்ள ஒரப்பம் கிராமத்தில் நடந்த வாரச்சந்தையில் 100 சதவீதம் வாக்களிக்கவும், வாக்குப்பதிவு எந்திரம், விவி பேட் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்தும் பொதுமக்களுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் உமாமகேஸ்வரி தலைமை தாங்கினார். பர்கூர் தாசில்தார் வெங்கடேசன், வட்ட வழங்கல் அலுவலர் பொன்னாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அப்போது தேர்தல் பிரசார வாகனம் மூலமும், துண்டு பிரசுரங்கள் வினியோகத்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை வருவாய் அலுவலர் சிவராஜ் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.