தர்மபுரி மாவட்டத்தில் வறட்சி நிவாரண பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் விவசாய தொழிலாளர் சங்கம் வலியுறுத்தல்

தர்மபுரி மாவட்டத்தில் வறட்சி நிவாரண பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்று தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

Update: 2019-03-28 23:15 GMT
தர்மபுரி,

தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் தர்மபுரி மாவட்டக்குழு கூட்டம் தர்மபுரியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பிரதாபன் தலைமை தாங்கினார்.

தர்மபுரி மாவட்டத்தில் நிலவும் கடுமையான வறட்சி, குடிநீர் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

தர்மபுரி மாவட்டத்தில் வறட்சி பாதிப்பு நிவாரண பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள 251 ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சி பகுதிகளில் வசிக்கும் அனைவருக்கும் தினமும் ஒகேனக்கல் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கறவை மாடுகள் உள்ளிட்ட அனைத்து வகை கால்நடைகளுக்கும் தீவனங்களை இலவசமாக வழங்க வேண்டும். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். வறட்சி நிவாரணமாக ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள நீர்த்தேக்கங்கள், பொதுப்பணித்துறை ஏரிகள், உள்ளாட்சி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள், குளங்கள், குட்டைகள், கால்வாய்களை தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மூலம் தூர்வாரி சீரமைக்க வேண்டும்.

தர்மபுரி மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் 1200 அடிக்கு கீழே சென்று உள்ளது. எனவே காவிரி ஆற்றில் உபரி நீர் செல்லும் காலங்களில் அந்த உபரி நீரை தர்மபுரி மாவட்ட ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். வறட்சி நிவாரண பணிகளை கண்காணிக்க கிராம அளவிலும், வட்டார அளவிலும், மாவட்ட அளவிலும், விவசாயிகள், தொழிலாளர்கள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கொண்ட கண்காணிப்பு குழுவை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்