ஓடும் ரெயிலில் பெண்ணிடம் தங்க சங்கிலி பறிக்க முயற்சி கையை கடித்ததால் 3 பவுன் நகை தப்பியது

ஓடும் ரெயிலில் பெண்ணிடம் தங்க சங்கிலி பறிக்க முயன்றபோது அவர் கையை கடித்ததால் 3 பவுன் நகை தப்பியது.

Update: 2019-03-28 22:30 GMT
ஜோலார்பேட்டை,

ஈரோடு முள்ளிப்பாளையம் கங்காநகரை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி மேனகா (வயது 38). இவர் சென்னையில் உள்ள அழகு நிலைய பயிற்சி மையத்தில் 5 நாட்கள் பயிற்சிக்கு சென்றார்.

அங்கு பயிற்சியை முடித்துவிட்டு, சென்னையில் இருந்து ஈரோடு நோக்கி செல்லும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் எஸ்.12 இருக்கை எண் 7-ல் நேற்று முன்தினம் பயணம் செய்தார்.

நள்ளிரவு அந்த ரெயில் வாலாஜா ரெயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தது. அப்போது மர்ம நபர் ஒருவர் மேனகாவின் கழுத்தில் இருந்த 3 பவுன் சங்கிலியை பறிக்க முயன்றார்.

சுதாரித்து கொண்ட மேனகா மர்ம நபரின் கையை பிடித்து கடித்தார். வலி தாங்க முடியாத மர்ம நபர் தங்க சங்கிலியை விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டார். இதனால் 3 பவுன் தங்க சங்கிலி தப்பியது.

இதுகுறித்து மேனகா ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்