அரக்கோணத்தில் கத்தியால் குத்தி கார் டிரைவர் கொலை அண்ணன் கைது

அரக்கோணத்தில் கார் டிரைவரை கத்தியால் குத்தி கொன்ற அண்ணனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-03-28 22:30 GMT
அரக்கோணம்,

அரக்கோணம், நேதாஜி நகரைச் சேர்ந்தவர் தைரியநாதன், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மனைவி அனபில்லா (வயது 65). இவர்களுக்கு லால்ஆத்மநாதன் (36), பிரபுநாதன் (30) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். லால்ஆத்மநாதன் டி.வி. மெக்கானிக், பிரபுநாதன் கார் டிரைவர். இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் லால்ஆத்மநாதன் குடித்து விட்டு சமையல் செய்வதற்காக சிக்கன் வாங்கி கொண்டு வீட்டிற்கு வந்துள்ளார். தாய் அனபில்லாவிடம் சிக்கனை கொடுத்து எனக்கு சமைத்து கொடு என்று கேட்டுள்ளார். அனபில்லா இரவு 10 மணிக்கு சிக்கனை கொண்டு வந்து சமைத்து கொடு என்று கேட்கிறாயே, இன்று வீட்டில் இருக்கிற சாப்பாட்டை சாப்பிடு, நாளை காலை சிக்கன் சமைத்து தருகிறேன் என்று கூறி உள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த லால்ஆத்மநாதன் பாத்திரத்தில் இருந்த சாப்பாட்டை கீழே கொட்டி பாத்திரத்தை தூக்கி எறிந்துள்ளார். சத்தம் கேட்டு எழுந்த பிரபுநாதன், லால்ஆத்மநாதனிடம் இரவு 10 மணிக்கு குடித்து விட்டு வந்து ஏன் அம்மாவிடம் தகராறு செய்கிறாய் என்று கேட்டுள்ளார்.

அப்போது அவர் இதை கேட்க நீ யார்? என்று தகராறு செய்து, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பிரபுநாதனை குத்தி உள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் விரைந்து வந்து பிரபுநாதனை மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம், சப்-இன்ஸ்பெக்டர் மஞ்சுநாத் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று லால்ஆத்மநாதனை கைது செய்தனர்.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அரக்கோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்