சென்னை பாடியில் தே.மு.தி.க. பிரமுகர் வெட்டிக்கொலை

சென்னை பாடியில் பட்டப்பகலில் தே.மு. தி.க. பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

Update: 2019-03-28 23:45 GMT
பூந்தமல்லி,

சென்னை பாடி, சக்தி நகரை சேர்ந்தவர் பாண்டியன்(வயது 45). கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். தே.மு.தி.க.வில் பொறியியல் பிரிவில் மாநில இணை செயலாளராக பதவி வகித்து வந்தார்.

இவருடைய மனைவி செல்வி. இவர்களுக்கு ரோகித் (14), கீர்த்தன், ஜிவேஸ் என 3 மகன்கள் உள்ளனர். இவர்களில் ரோகித், அண்ணாநகரில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறான். தினமும் பள்ளிக்கு ஆட்டோவில் சென்று வருவான்.

நேற்று ஆட்டோ வர தாமதம் ஆனது. தற்போது தேர்வு நடைபெற்று வருவதால் பாண்டியன், தனது மகனை மோட்டார்சைக்கிளில் அழைத்துச் சென்று பள்ளியில் கொண்டு போய் விட்டார்.

பின்னர் அவர் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். பாடி சீனிவாசன் நகர் அருகே வந்தபோது மோட்டார்சைக்கிளில் வந்த மர்மகும்பல் பாண்டியனை வழி மறித்து அரிவாளால் வெட்ட முயன்றது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பாண்டியன், அவர்களிடம் இருந்து தப்பிக்க அங்கிருந்து ஓடினார். அந்த கும்பல் விடாமல் அவரை விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டியது. இதில் படுகாயம் அடைந்த பாண்டியன், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து கொரட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உதவி கமிஷனர் கண்ணன் தலைமையில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், கொலையான பாண்டியன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் ‘டைசன்’ வரவழைக்கப்பட்டது. அது சம்பவம் நடந்த இடத்தில் இருந்து விவேகானந்தா நகர் வரை ஓடி, நின்றுவிட்டது. யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை.

இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பாண்டியன் 2006 மற்றும் 2016 ஆகிய சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வி அடைந்ததாக தெரிகிறது.

ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த பாண்டியன், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு அடுக்குமாடி குடியிருப்பை பத்திரப்பதிவு செய்ததாகவும், அதில் இரு தரப்புக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

நேற்றுமுன்தினம் மர்ம நபர்கள் பாண்டியனை செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டும்தொணியில் பேசினர். அப்போது போனிலேயே பாண்டியனுக்கும், எதிர் முனையில் பேசியவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

எனவே முன்விரோதம் காரணமாக பாண்டியன் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தொழில் போட்டியா? அல்லது வேறு காரணங்கள் உள்ளனவா? என்ற கோணத்தில் கொரட்டூர் போலீசார், தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

மேலும் பாண்டியனின் செல்போனை பறிமுதல் செய்த போலீசார், அவர் கடைசியாக யாரிடம் பேசினார்?. அவருடன் பேசியவர்கள் யார்? என்பது குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை செய்து வருகின்றனர். பட்டப்பகலில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்