உளுந்தூர்பேட்டை அருகே, மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; டாஸ்மாக் ஊழியர்கள் 2 பேர் பலி
உளுந்தூர்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-;
உளுந்தூர்பேட்டை,
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள பள்ளிபுதுப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கருணாகரன் (வயது 40). இவர் உளுந்தூர்பேட்டை அடுத்த பு.மாம்பாக்கம் குறுக்கு சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார்.
உளுந்தூர்பேட்டை அன்னை சத்யா தெருவை சேர்ந்த சுரேஷ்(32) என்பவர் அந்த கடையில் உதவியாளராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் கருணாகரன், சுரேஷ் ஆகியோர் டாஸ்மாக் கடைக்கு வந்தனர். பின்னர் அவர்கள் வியாபாரத்தை முடித்து விட்டு இரவில் சாப்பிடுவதற்காக உளுந்தூர்பேட்டையில் இருந்து மூலசமுத்திரம் தக்கா பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர்.
நள்ளிரவு 1 மணியளவில் மூலசமுத்திரம் தக்கா புறவழிச்சாலையில் வந்து கொண்டிருந்தபோது, சேலத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற லாரி ஒன்று இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டதில் கருணாகரன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
சுரேஷ் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதை பார்த்த அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சுரேசை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சுரேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதற்கிடையே இதுபற்றி அறிந்த உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்து குறித்து விசாரித்தனர். பின்னர் கருணாகரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.