‘பயோமெட்ரிக்’ வருகைப்பதிவேடு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தை துப்புரவு பணியாளர்கள் முற்றுகை
‘பயோமெட்ரிக்’ வருகைப்பதிவேடு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தை துப்புரவு பணியாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் நகராட்சியில் 157 நிரந்தர துப்புரவு பணியாளர்களும் இவர்களை தவிர தற்காலிக துப்புரவு பணியாளர்கள் 150 பேரும் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவரும் தினமும் காலை 6 மணி, 11 மணி, மதியம் 2 மணி மற்றும் மாலை 5 மணி ஆகிய நேரங்களில் வருகைப்பதிவேட்டில் கையெழுத்திட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது விழுப்புரம் நகராட்சியில் ‘பயோ மெட்ரிக்’ வருகை பதிவேடு முறை கொண்டு வரப்பட்டு அதன் மூலம் வருகைப்பதிவேடு செய்யப்பட்டு வருகின்றன. இந்த முறையில் தினமும் 4 முறை வருகைப்பதிவு செய்வதில் தங்களுக்கு சிரமம் ஏற்படும் எனக்கூறி அதற்கு ஏற்கனவே துப்புரவு பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆனால் நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில் நேற்று மாலை தொ.மு.ச. துப்புரவு பணியாளர்கள் சங்கத்தினர், நகராட்சி அலுவலகத்திற்கு திரண்டு வந்து திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையறிந்ததும் நகராட்சி ஆணையர் லட்சுமி விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது துப்புரவு பணியாளர்கள் கூறுகையில், எங்களுக்கென்று இருந்த குடியிருப்புகள் அகற்றப்பட்டு சட்டக்கல்லூரி அமைக்கும் பணி நடந்து வருகிறது. தற்போது நெடுஞ்தொலைவில் இருந்து பெரும்பாலானோர் வருகிறோம். ஆகவே ‘பயோமெட்ரிக்’ முறையில் 4 முறை வருகைப்பதிவேடு செய்வது சாத்தியமற்றது. அதற்கு பதிலாக காலை, மாலை ஆகிய 2 வேளைகளில் மட்டும் வருகைப்பதிவு செய்ய உரிய ஏற்பாடு செய்ய வேண்டும் என்று முறையிட்டனர்.
இதனை ஏற்றுக்கொண்ட நகராட்சி ஆணையர் லட்சுமி, வருகிற 1-ந்தேதி முதல் 2 முறை வருகைப்பதிவேடு செய்யும் வகையில் ‘பயோமெட்ரிக்’ முறையில் மாற்றம் செய்வதாக உறுதியளித்தார். இதனை ஏற்றுக்கொண்ட துப்புரவு பணியாளர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.