தஞ்சையில் இருந்து, வாக்குப்பதிவு எந்திரங்களை தாசில்தார் அலுவலகங்களுக்கு அனுப்பும் பணி

தஞ்சையில் இருந்து வாக்குப்பதிவு எந்திரங்களை தாசில்தார் அலுவலகங்களுக்கு அனுப்பும் பணியில் வருவாய்த்துறையினர் ஈடுபட்டனர்.

Update: 2019-03-27 22:45 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை நாடாளுமன்ற தொகுதி தேர்தல் மற்றும் தஞ்சை சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் அடுத்தமாதம் (ஏப்ரல்) 18-ந் தேதி நடக்கிறது. நாடாளுமன்ற தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள 2,290 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு அன்று 11,781 அலுவலர்கள் பணியில் ஈடுபட உள்ளனர். அதில் 2,746 பேர் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களாகவும், 8,341 பேர் 1,2,3 மற்றும் 4-ம் நிலை வாக்குப்பதிவு அலுவலர்களாகவும் பணியாற்ற உள்ளனர்.

தஞ்சை சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள 289 வாக்குச்சாவடிகளில் கூடுதலாக 694 அலுவலர்கள் 5 மற்றும் 6-ம் நிலை வாக்குப்பதிவு அலுவலர்களாக பணியாற்ற உள்ளனர்.

வாக்குப்பதிவு உபகரணங்களை வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லவும், வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு தேர்தல் பணி தொடர்பாக தேவையான உதவிகளை செய்யவும் 195 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மண்டல குழுவிற்கும் சராசரியாக 10 வாக்குச்சாவடிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தஞ்சை நாடாளுமன்ற தொகுதி தேர்தல் மற்றும் தஞ்சை சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் 5,722 வாக்குப்பதிவு எந்திரங்களும், 3,662 கட்டுப்பாட்டு எந்திரங்களும், 4005 வி.வி.பேட் எந்திரங்களும் பயன்படுத்தப்பட உள்ளன.

தஞ்சை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருவையாறு, ஒரத்தநாடு, தஞ்சை ஆகிய தாலுகாவிற்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த எந்திரங்களை தாசில்தார் அலுவலகங்களுக்கு அனுப்பும் பணி நேற்று நடைபெற்றது.

கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். திருவையாறு தாலுகாவில் உள்ள 307 வாக்குச்சாவடிகளுக்கும், ஒரத்தநாடு தாலுகாவில் உள்ள 285 வாக்குச்சாவடிகளுக்கும், தஞ்சை தாலுகாவில் உள்ள 286 வாக்குச்சாவடிகளுக்கும் தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சோதித்து பார்த்து அந்தந்த தாலுகாக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

மேலும் செய்திகள்