கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் 8 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு - கலெக்டர் பிரசாந்த் வடநேரே தகவல்
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் 8 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் பிரசாந்த் வடநேரே தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில்,
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 19-ந் தேதி தொடங்கியது. நேற்று முன்தினம் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள். அன்றைய தினம் 18 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். மொத்தத்தில் 24 வேட்பாளர்கள் 30 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.
வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று காலை நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் வருவாய் அலுவலர்கள் கூட்ட மண்டபத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமையில் அதிகாரிகள் முன்னிலையில் வேட்பு மனு பரிசீலனை நடந்தது. இதில் அ.ம.மு.க. வேட்பாளர் லட்சுமணன், மக்கள் நீதி மய்ய வேட்பாளர் எபினேசர், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெயின்றீன், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்டு (ரெட் ஸ்டார்) வேட்பாளர் பால்ராஜ் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள், தி.மு.க.- அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
வேட்பு மனு பரிசீலனைக்குப்பிறகு கலெக்டர் பிரசாந்த் வடநேரே நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் மொத்தம் 30 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் சில வேட்பாளர்கள் 2, 3 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்து இருந்தனர். ஒரு வேட்பாளர் 4 வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். இன்று (அதாவது நேற்று) வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது.
30 வேட்பு மனுக்களில் 8 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 22 வேட்பு மனுக்களில் சில வேட்பாளர்கள் கூடுதல் மனுக்கள் தாக்கல் செய்திருந்ததால் அந்த மனுக்களையும் கழித்ததுபோக மீதமுள்ள வேட்பாளர்கள் பட்டியலை மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் உள்ள விளம்பர பலகையில் ஒட்ட இருக்கிறோம். மனுக்கள் பரிசீலனைக்குப்பிறகு தற்போது 16 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. வருகிற 29-ந் தேதி பிற்பகல் 3 மணிக்கு அனைத்துக் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும்.
அதற்கு முன்பு வரை 16 வேட்பாளர்களில் யாராவது ஒருவர் தங்களது வேட்பு மனுவை வாபஸ் பெற விரும்பினால் வாபஸ் பெற்று கொள்ளலாம். தேர்தல் ஆணைய ஒழுங்குமுறைகளின்படி சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும். இறுதி வேட்பாளர் பட்டியலும் அன்று வெளியிடப்படும். அதன்படி வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெறும். எனவே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட பிறகுதான் எத்தனை வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள் என்பது தெரிய வரும்.
வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ததில் இருந்து அவர்களது செலவு தனியாக பராமரிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து அவர்கள் தங்களது கணக்குகளை பராமரித்து வர வேண்டும். நாங்களும் அந்த கணக்குகளை பராமரித்து வருகிறோம். தேர்தல் செலவின பார்வையாளர்கள் வந்துவிட்டு சென்று இருக்கிறார்கள். அவர்களும் வருகிற 30-ந் தேதி வந்து விடுவார்கள். அதற்கு முன்னதாக பொது தேர்தல் பார்வையாளர்களும் வந்து விடுவார்கள். இனிமேல் தேர்தல் செலவினங்கள் எல்லாம் வேட்பாளர் பெயரில் வரவு வைக்கப்படும். கட்சி பெயரில் இருக்காது.
வேட்பு மனு பரிசீலனையின்போது சுயேச்சை வேட்பாளர்களின் மனுக்களும், மாற்று வேட்பாளர் ஒருவரது வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைய அறிவுரையின்படி அனைத்து வேட்பாளர்களும் ஒரு அபிடவிட் தாக்கல் செய்ய வேண்டும். அந்த அபிடவிட் விண்ணப்பத்தில் எதையும் நிரப்பாமலோ, கோடு போடுதலோ இருக்கக்கூடாது. ஆம், இல்லை அல்லது பொருத்தமாக இல்லை என்று தெரிவித்திருக்க வேண்டும். நிறைய மனுக்களில் முக்கியமான கேள்விகளுக்கு பதில் அளிக்கப்படாமல் இருந்தது. உதாரணமாக குற்றவியல் வழக்கு இருக்கிறதா? இல்லையா? என்ற கேள்விக்கு ஆம், இல்லை என்று பதில் கொடுக்கவில்லை என்றால் அது பரிசீலனையின்போது பார்க்கப்படும். அதனால் அந்த விண்ணப்பம் முழுமையாக நிரப்பப்படவில்லை என்று அர்த்தமாகி விடுகிறது. எழுத்து பிழைகள் இருந்தால் அதற்கு நாங்கள் வாய்ப்பு வழங்கியிருக்கிறோம்.
தேர்தல் நடத்தை விதிகளை மீறியது தொடர்பாக வழக்கும் பதிவு செய்துள்ளோம். 1950 மற்றும் தேர்தல் ஆணையத்தின் மொபைல் ஆப் போன்றவற்றுக்கும் புகார்கள் வந்துள்ளன. குமரி மாவட்டத்தில் இருந்து ராணுவத்தில் பணியாற்றக்கூடியவர்கள் 8 ஆயிரம் பேரை கண்டறிந்துள்ளோம். அவர்களுக்கு 29-ந் தேதிக்கு பிறகு ஆன்லைன் மூலம் வாக்களிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள உள்ளோம்.
இவ்வாறு கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறினார்.