நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் 6 வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் தள்ளுபடி
நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் பரிசீலனையின்போது 6 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. மீதமுள்ள 30 பேரின் வேட்புமனுக்கள் ஏற்று கொள்ளப்பட்டன.
நாமக்கல்,
நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட 36 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தனர். இவர்களில் முக்கிய அரசியல் கட்சியினர் சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். எனவே மொத்தமாக 46 வேட்பு மனுக்கள் வந்து இருந்தன. இவர்களின் வேட்புமனுக்கள் நேற்று கலெக்டர் ஆசியா மரியம் முன்னிலையில் பரிசீலனை செய்யப்பட்டன.
இந்த பரிசீலனையின் போது அ.தி.மு.க. மாற்று வேட்பாளர் ராஜா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாற்று வேட்பாளர் மாதேஸ்வரன், நாம் தமிழர் கட்சியின் மாற்று வேட்பாளர் மனோகரன் ஆகியோரின் வேட்பு மனுக்களும், தேசிய மக்கள் கழகத்தின் வேட்பாளர் மல்லிகா, பூர்வாஞ்சல் ஜனதா கட்சியின் வேட்பாளர் சரவணன், சுயேச்சை வேட்பாளர் செந்தில்குமார் ஆகியோரின் வேட்புமனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.
இவர்களில் ராஜா, மாதேஸ்வரன், மனோகரன் ஆகியோரின் வேட்புமனுக்கள் அக்கட்சிகளின் பிரதான வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டதால் தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பதாகவும், மல்லிகா, சரவணன் ஆகியோரின் வேட்புமனுக்களை 10 பேர் முன்மொழிவு செய்யாததாலும், சுயேச்சை வேட்பாளர் செந்தில்குமாரின் வேட்புமனுவில் படிவங்கள் முறையாக நிரப்பப்படாமல் இருந்ததாலும் தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மொத்தமாக 6 வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
பிரதான வேட்பாளர்களின் கூடுதல் மனுக்கள் உள்பட மொத்தம் 16 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து அ.தி.மு.க., கொ.ம.தே.க. உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் உள்பட 30 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர்.
வேட்புமனுக்களை வாபஸ் பெற நாளை (வெள்ளிக் கிழமை) கடைசி நாள் ஆகும். எனவே நாளை பிற்பகல் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேட்புமனு பரிசீலனைக்கு பிறகு தி.மு.க.வை சேர்ந்த வக்கீல் நீலகண்டன் கூறியதாவது:-
நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. முதன்மை வேட்பாளர் காளியப்பன் மற்றும் மாற்று வேட்பாளர் ராஜா ஆகியோர் மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்களில் ஒப்பந்தங்கள் பெற்று இருப்பதாக வேட்புமனு மற்றும் உறுதிமொழி பத்திரத்தில் கூறி இருப்பதால், அவர்களின் வேட்புமனுக்களை ஏற்க கூடாது என தி.மு.க. கூட்டணி சார்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து தேர்தல் அலுவலர் அ.தி.மு.க. தரப்பில் விளக்கம் கேட்டு உள்ளார். அதனால் அவரின் வேட்புமனு ஏற்பது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இதை தொடர்ந்து வெளியே வந்த அ.தி.மு.க. வக்கீல் மணிமேகலை கூறியதாவது:-
நாமக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கு அ.தி.மு.க. சார்பில் டி.எல்.எஸ்.காளியப்பன் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தார். அவருக்கு மத்திய அரசுடன் நேரடி ஒப்பந்தம் இருப்பதாக கூறி தி.மு.க. கூட்டணி சார்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அரசோடு எந்த ஒரு ஒப்பந்தமும் நேரடியாக தங்களுக்கு இல்லை என அ.தி.மு.க. வேட்பாளர் டி.எல்.எஸ்.காளியப்பன் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. பின்னர் எங்கள் வேட்பாளரின் மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
தி.மு.க. கூட்டணி தரப்பினரின் ஆட்சேபனை மற்றும் அ.தி.மு.க. தரப்பு விளக்கம் ஆகியவற்றால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.கே.பி.சின்ராஜின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருவேறு இடங்களில் இடம் பெற்று இருப்பதாகவும், இது சட்ட விரோதம் எனவும், எனவே அவரது வேட்புமனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் சுயேட்சை வேட்பாளர் செல்லமுத்து தேர்தல் நடத்தும் அலுவலர் ஆசியா மரியத்திடம் மனு அளித்தது குறிப்பிடத்தக்கது.