அ.தி.மு.க. வேட்பாளரின் வேட்புமனு ஏற்பு: கோர்ட்டில் வழக்கு தொடருவோம் ஈ.ஆர்.ஈஸ்வரன் பேட்டி
நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் காளியப்பன் வேட்புமனு ஏற்கப்பட்டது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடருவோம் என கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறினார்.
நாமக்கல்,
நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் ஏ.கே.பி.சின்ராஜ் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். இதையொட்டி நேற்று தி.மு.க. கூட்டணியின் நாமக்கல் சட்டசபை தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்தது.
கூட்டத்துக்கு நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் காந்திசெல்வன் தலைமை தாங்கினார். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன், காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவர் ஷேக்நவீத் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
இதில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு வேட்பாளர் ஏ.கே.பி.சின்ராஜை அறிமுகம் செய்துவைத்து பேசினார்.
முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
எங்களது வேட்பாளர் சின்ராஜ் எந்த அதிகாரத்திலும் இல்லாமல் பல்வேறு மக்கள் சேவை செய்துள்ளார். வேட்பாளர்களை ஒப்பிட்டு அ.தி.மு.க.வினரிடம் கேள்வி எழுப்பியபோது, யாரை நிறுத்தினாலும் பணத்தை கொடுத்து வெற்றிபெறுவோம் என தெரிவித்துள்ளனர். இதை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
அ.தி.மு.க. பா.ஜனதாவுடன் கூட்டணி சேர்ந்து இருப்பது தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு அல்ல. அ.தி.மு.க.வின் முன்னணி தலைவர்கள் 10 பேர் மீது வழக்கு உள்ளது. அதில் இருந்து தப்பித்துக்கொள்ளவே, கூட்டணி அமைத்து இருப்பதாக அ.தி.மு.க. தொண்டர்களே பேசுகிறார்கள். எனவே எங்களின் வெற்றி உறுதியாகி விட்டது.
பொள்ளாச்சி பாலியல் வன்முறை சம்பவம் கண்டிப்பாக வருகிற நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும். இது தொடர்பாக விவாதம் நடத்த தயாரா? என அமைச்சர் தங்கமணி கேள்வி எழுப்பி உள்ளார். அவருடன் விவாதம் நடத்த நான் தயாராக இருக்கிறேன். தேதியை மட்டும் நீங்கள் கேட்டு சொல்லுங்கள். நான் இடத்தை தேர்வு செய்கிறேன்.
நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி வேட்புமனு பரிசீலனையின்போது அ.தி.மு.க. வேட்பாளர் காளியப்பன் அரசு ஒப்பந்ததாரராக இருக்கிறார் என்பதை சுட்டிக்காட்டி தி.மு.க. வக்கீல் கலெக்டரிடம் புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரது வேட்புமனு பரிசீலனை நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதன் பின்னர் தி.மு.க. வக்கீலின் பேச்சை கேட்காமல், கலெக்டர் அ.தி.மு.க. வேட்பாளரின் வேட்புமனு ஏற்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஆனால் எப்படி ஏற்கப்பட்டது என்பதை விளக்கவில்லை. இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவிக்க உள்ளோம். அதன்பிறகு பார்த்துவிட்டு, இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடருவோம். நாமக்கல் சட்டமன்ற உறுப்பினரை நாகரிகமாக பேசவேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன். அவரது பேச்சு எங்களுக்கு கூடுதலாக 50 ஆயிரம் வாக்குகளை பெற்று தரும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்துகொண்டனர்.