திராவகம் வீச்சில் இளம்பெண் பலி: கொலை செய்யும் நோக்கத்தில் செய்யவில்லை தூக்கு தண்டனை கைதி ஐகோர்ட்டில் தகவல்

திராவகம் வீச்சில் இளம்பெண் பலியான வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட வாலிபர், இளம்பெண்ணை கொலை செய்யும் நோக்கத்தில் இதை செய்யவில்லை என ஐகோர்ட்டில் தெரிவித்தார்.;

Update: 2019-03-27 23:00 GMT
மும்பை,

திராவகம் வீச்சில் இளம்பெண் பலியான வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட வாலிபர், இளம்பெண்ணை கொலை செய்யும் நோக்கத்தில் இதை செய்யவில்லை என ஐகோர்ட்டில் தெரிவித்தார்.

திராவகம் வீச்சில் இளம்பெண் சாவு

டெல்லியை சேர்ந்தவர் பிரீத்தி ரதி (வயது23). கடற்படையில் நர்சிங் வேலை வாய்ப்பு பெற்ற அவர், கடந்த 2013-ம் ஆண்டு மே 2-ந் தேதி, டெல்லியிலிருந்து ரெயில் மூலம் மும்பை வந்தார். அதே ரெயிலில் அவரை பின்தொடர்ந்து வந்த அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த அங்குர் பன்வர் (26) என்ற வாலிபர் திடீரென தான் வைத்திருந்த திராவகத்தை எடுத்து பிரீத்தி ரதி மீது வீசிவிட்டு தப்பி சென்று விட்டார்.

இதில் ஒரு மாதமாக உயிருக்கு போராடிய பிரீத்தி ரதி அந்த ஆண்டு ஜூன் 1-ந் தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஒரு வருடத்துக்கு பின் அங்குர் பன்வர் இக்கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டார். அப்போதைய விசாரணையில், தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்ததாலும், பிரீத்தி ரதிக்கு மும்பையில் கடற்படையில் வேலை கிடைத்ததில் பொறாமை கொண்டும் அவர் மீது திராவகம் வீசியது தெரியவந்தது.

இந்த வழக்கில் சிறப்பு கோர்ட்டு அங்குர் பன்வருக்கு தூக்கு தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு கூறியது. திராவகம் வீசிய வழக்கில் குற்றவாளி ஒருவருக்கு முதல் முறையாக தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது இந்த வழக்கில் தான்.

கொலை நோக்கம் அல்ல

இந்தநிலையில், அங்குர் பன்வருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்யக்கோரி மராட்டிய அரசு சார்பில் ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது விசாரணை நடந்து வருகிறது. நேற்று இந்த விசாரணை நீதிபதிகள் பி.பி.தர்மாதிகாரி, பி.டி. நாயக் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.

இதில், அங்குர் பன்வர் சார்பில் அவரது வக்கீல் திரிதீப் பாயிஸ் வாதாடினார். அப்போது, தனது மனுதாரர் தனது கோர செயல் பிரீத்தி ரதிக்கு பெரிய காயத்தையும், முகத்தை கொடூரமாக்கும் என்பதை தெரிந்து இருந்தார். ஆனால் அவர் பிரீத்தி ரதியை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இதை செய்யவில்லை. எனவே அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 304(2) பிரிவின் கீழ் கொலை அல்லாத மரணத்தை விளைவிக்கும் வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும். இதன் மூலம் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்க முடியும். ஆனால் கொலை வழக்கு பதிவு செய்திருக்க கூடாது என்றார்.

மேலும் செய்திகள்