பரமத்தி வேலூரில் வாழைத்தார் விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி
பரமத்தி வேலூரில் வாழைத்தார் விலை உயர்வடைந்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பரமத்தி வேலூர்,
பரமத்தி வேலூர் காவிரி கரையோர பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிர் செய்யப்பட்டு உள்ளது. இங்கு விளையும் வாழைத்தார்கள் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, ஈரோடு, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் தினந்தோறும் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.
மேலும் பரமத்தி வேலூர் தினசரி வாழைத்தார் ஏல சந்தையிலும் வாழைத்தார்கள் ஏலம் விடப்பட்டு வருகிறது.
கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 1,000 வாழைத்தார்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.300-க்கும், ரஸ்தாளி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.300-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.400-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.350-க்கும் ஏலம் போனது. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.6-க்கு விற்பனையானது.
இந்தநிலையில் நேற்று நடைபெற்ற ஏலத்திற்கும் கடந்த வாரத்தை போல 1,000 வாழைத்தார்கள் விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.400-க்கும், ரஸ்தாளி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.400-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.500-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.450-க்கும் ஏலம் போனது. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.8-க்கு விற்பனையானது.
தற்போது பரமத்தி வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கோவில் திரு விழாக்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் வாழைத்தார் விலை உயர்வடைந்து உள்ளதாக வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.