வாசுதேவநல்லூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; மீன் வியாபாரி சாவு
வாசுதேவநல்லூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் மீன் வியாபாரி பரிதாபமாக இறந்தார்.
வாசுதேவநல்லூர்,
நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் காமராஜர் 1-வது தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் என்ற குமார் (வயது 32). மீன் வியாபாரி. இவர் நேற்று காலை 8 மணிக்கு தனது மோட்டார் சைக்கிளில் வியாபாரத்திற்கு சென்று கொண்டிருந்தார்.
வாசுதேவநல்லூர் மாரியம்மன் கோவில் அருகே சென்றபோது அந்த பகுதியில் திருமலாபுரம் பள்ளி வாசல் தெருவை சேர்ந்த சிக்கந்தர் என்ற பாதுஷா (35) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், சுப்பிரமணியன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன.
இதில் 2 பேரும் பலத்த காயமடைந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே சுப்பிரமணியன் பரிதாபமாக உயிரிழந்தார். பாதுஷா ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில், வாசுதேவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.