கடனை திருப்பி செலுத்தாததால் செல்போனில் படம் எடுத்தனர், அவமானம் தாங்காமல் தீக்குளித்து பெண் தற்கொலை
மகளிர் குழுவில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததற்காக வீட்டின் முன்பு நிற்க வைத்து வங்கி ஊழியர்கள் போட்டோ எடுத்ததால் அவமானம் அடைந்த பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
மயிலாடுதுறை,
நாகை மாவட்டம் மயிலாடுதுறை கிட்டப்பா நகரை சேர்ந்தவர் சுரேஷ். இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி லலிதா லட்சுமி(வயது 28). இவர்களுக்கு திருமணம் ஆகி 8 ஆண்டுகள் ஆகிறது. 4 வயதில் பிரியதர்ஷிணி என்ற பெண் குழந்தையும், ஆதீஸ்வரா என்ற 7 மாத ஆண் குழந்தையும் உள்ளனர்.
மகளிர் சுய உதவி குழு தலைவியாக இருந்து வந்த லலிதா லட்சுமி, மயிலாடுதுறையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் கடன் வாங்கி இருந்தார்.
சுரேசுக்கு கடந்த சில நாட்களாக சரிவர வேலை கிடைக்காததால் லலிதா லட்சுமி தான் வாங்கிய கடனுக்கான கடைசி மாத நிலுவை தொகையை செலுத்துவதற்கு சில நாட்கள் தாமதம் ஆகி விட்டதாக தெரிகிறது. ஒவ்வொரு மாத நிலுவையையும் சரியான நேரத்தில் திரும்ப செலுத்தி வந்த லலிதா லட்சுமியால் குடும்ப சூழ்நிலை காரணமாக கடைசி மாத நிலுவை தொகையை செலுத்த முடியவில்லை என்று தெரிகிறது.
இந்த நிலையில் அந்த நிதி நிறுவனத்தை சேர்ந்த சிலர் லலிதா லட்சுமி வீட்டிற்கு சென்று கடன் நிலுவையை கேட்டு மிரட்டி தகாத வார்த்தைகளால் அவரை திட்டி சத்தம் போட்டு உள்ளனர். மேலும் அவரை செல்போனில் படம் எடுத்து உள்ளனர். அக்கம், பக்கத்தினர் முன்னிலையில் நிதி நிறுவனத்தினர் தன்னை தகாத வார்த்தைகளால் திட்டியதையும், செல்போனில் படம் எடுத்ததையும் லலிதா லட்சுமியால் ஜீரணிக்க முடியவில்லை.
இதனால் மிகுந்த அவமானம் அடைந்த லலிதா லட்சுமி, தான் இனிமேல் ஒரு நிமிடம் கூட உயிர் வாழக்கூடாது என்று முடிவு செய்து வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை எடுத்து வந்து தனது உடல் மீது ஊற்றிக்கொண்டு தீ வைத்துக்கொண்டார். அதைப்பார்த்த அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு லலிதா லட்சுமி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து லலிதா லட்சுமியின் தாய் முருகேஸ்வரி மயிலாடுதுறை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் டெல்லிபாபு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
தாயை இழந்த குழந்தைகள்
லலிதா லட்சுமி தற்கொலை செய்து கொண்டதால் அவரது இரண்டு குழந்தைகளும் தாயை இழந்து தவித்து வருகின்றனர். அந்த குழந்தைகளை பார்த்து உறவினர்கள், கிராம மக்கள் கதறி அழுதது காண்போரின் கண்களையும் குளமாக்கியது.
மகளிர் குழுவில் வாங்கிய கடனுக்காக அவமானப்படுத்தியதால் 2 குழந்தைகளின் தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.