பிளஸ்-2 மாணவி கடத்தல்: கல்லூரி விரிவுரையாளர் கைது
பிளஸ்-2 மாணவியை கடத்திய வழக்கில் கல்லூரி விரிவுரையாளரை போலீசார் கைது செய்தனர்.;
தர்மபுரி,
தர்மபுரி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்த மாணவி திடீரென வீட்டில் இருந்து மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், மாணவியை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து மாணவியின் உறவினர்கள் தர்மபுரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில் மாணவியை அதே பகுதியை சேர்ந்த தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வந்த கோபாலகிருஷ்ணன்(வயது 26) என்பவர் கடத்தி சென்றிருக்கலாம் என்று சந்தேகம் தெரிவித்தனர். இந்த புகார் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
இந்த நிலையில் கோபாலகிருஷ்ணன் தர்மபுரி பகுதியில் மாணவியுடன் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று கோபாலகிருஷ்ணனை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் போலீசார் அவருடன் இருந்த மாணவியை மீட்டு தொப்பூரில் உள்ள காப்பகத்தில் சேர்த்தனர். மாணவியை கடத்தியது தொடர்பாக கோபாலகிருஷ்ணனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.