பாப்பிரெட்டிப்பட்டி, அரூர்(தனி) தொகுதி இடைத்தேர்தல்: மக்கள் நீதிமய்யம் வேட்பாளர் உள்பட 16 பேரின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி

பாப்பிரெட்டிப்பட்டி, அரூர்(தனி) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பு மனுதாக்கல் செய்த மக்கள் நீதிமய்யம் வேட்பாளர் உள்பட 16 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.;

Update: 2019-03-27 22:00 GMT
பொம்மிடி,

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர்(தனி) தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நாடாளுமன்ற தேர்தலுடன் வருகிற 18-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி இந்த தொகுதிகளில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் முடிவடைந்தது. இந்த மனுக்கள் பரிசீலனை நேற்று காலை தொடங்கியது.

பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டிட மொத்தம் 19 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் கீதாராணி தலைமையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டது. இதில் அ.தி.மு.க. மாற்று வேட்பாளர் மதிவாணன் உள்பட 7 பேரின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மீதமுள்ள அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க. வேட்பாளர்கள் உள்பட 12 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்று கொள்ளப்பட்டன.

அரூர்(தனி) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் 20 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். அரூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் உதவி கலெக்டரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான புண்ணியகோட்டி தலைமையில் மனுக்கள் பரிசலனை நடைபெற்றது. அப்போது மக்கள் நீதிமய்யம் வேட்பாளர் குப்புசாமி முறையாக பூர்த்தி செய்யாததால் அவருடைய மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த தொகுதியில் மாற்று வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 9 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மீதமுள்ள அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க. வேட்பாளர்கள் உள்பட 11 மனுக்கள் ஏற்று கொள்ளப்பட்டன. பாப்பிரெட்டிப்பட்டி, அரூர்(தனி) ஆகிய சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்களில் மக்கள் நீதிமய்யம் வேட்பாளர் உள்பட மொத்தம் 16 பேரின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்