லாரி டிரைவர் கொலை வழக்கு தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு
லாரி டிரைவர் கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
திருவள்ளூர்,
திருவண்ணாமலை மாவட்டம் திருமணி போஸ்ட் விநாயகபுரம் கிராமம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் அன்பு (வயது 30). இவர் சென்னை வேலப்பன்சாவடியில் தங்கி அங்கு செங்கல் எடுத்து செல்லும் லாரியில் டிரைவராக வேலை செய்து வந்தார்.
வானகரம் ராஜீவ்நகர் 2–வது தெருவை சேர்ந்த லட்சுமணன் என்கிற சின்னப்பையன் (37) வேலப்பன்சாவடியில் லாரிகளில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். அப்போது அன்புவுக்கும், லட்சுமணனுக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அன்பு அடிக்கடி லட்சுமணனிடம் செலவுக்கு பணம் வாங்கி, நீண்ட நாட்களாக கொடுக்காமல் இருந்து வந்துள்ளார்.
இதைத்தொடர்ந்து லட்சுமணன் தான் கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு அன்புவிடம் கேட்டார். இதில் அவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில் கடந்த 1–9–2017 அன்று இரவு லட்சுமணன் தான் கொடுத்த பணத்தை தருமாறு அன்புவிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் பணம் தர முடியாது என தெரிவித்தார்.
இதில் ஆத்திரம் அடைந்த லட்சுமணன் அங்கிருந்த ஆட்டுக்கல்லை எடுத்து அன்புவின் தலையில் போட்டு கொலை செய்து விட்டு தப்பிச் சென்று விட்டார். இதில் தலைநசுங்கி அன்பு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.
இது குறித்து முருகேசன் திருவேற்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து லட்சுமணனை கைது செய்தனர்.
இந்த வழக்கு திருவள்ளூரில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது. அரசு தரப்பு வக்கீலாக வி.ஆர்.ராம்குமார் வாதாடினார்.
இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி செல்வநாதன் குற்றவாளி லட்சுமணனுக்கு ஆயுள்தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார். அபராதத்தொகையை செலுத்த தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.