சுட்டெரிக்கும் வெயில், வறட்சி காரணமாக முதுமலையில் உணவு தேடி அலையும் வனவிலங்குகள்
சுட்டெரிக்கும் வெயில், வறட்சி காரணமாக முதுமலையில் உணவு தேடி வனவிலங்குகள் அலைகின்றன.;
கூடலூர்,
கூடலூர் பகுதியில் கடந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழை கடுமையாக பெய்தது. ஆனால் அதன்பின்னர் வடகிழக்கு பருவமழை பெய்யாமல் பொய்த்து போனது. இதனால் கடந்த சில வாரங்களாக கூடலூர், முதுமலை பகுதியில் வழக்கத்துக்கு மாறாக கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது.
சராசரியாக 72 டிகிரி வெப்ப நிலை நிலவுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். கடும் வெயிலால் இரவில் வீடுகளில் தூங்க முடியாத அளவுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது.
இதனிடையே கடும் வறட்சியால் வனவிலங்குகளுக்கு பசுந்தீவன தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் காட்டு யானைகள் ஊருக்குள் அதிகளவு வந்து விவசாய பயிர்களை தின்று சேதப்படுத்தி வருகின்றன. இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-
ஆண்டுதோறும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் கோடை மழை பெய்வது வழக்கம். இதனால் கோடை வெயிலால் ஏற்படும் வெப்பத்தின் தாக்கம் குறைவாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு இதுவரை கோடை மழை பெய்ய வில்லை.
இதேபோல் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் தேயிலை செடிகளில் சிவப்பு சிலந்தி நோய் தாக்குதல் மற்றும் தேயிலை செடிகள் காய்ந்து வருகிறது. மேலும் விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளது. கோடை மழை பெய்யாதது கவலை அளிக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வறட்சியின் தாக்கம் குறித்து வனத்துறையினர் கூறியதாவது:-
முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் கடும் வறட்சியால் காட்டு யானைகள், காட்டெருமைகள், மான்கள் தவிக்கின்றன. மேலும் அவைகளுக்கு பசுந்தீவன பற்றாக்குறையும் ஏற்பட்டு உள்ளது. இதனால் உணவு தேடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுதவிர குரங்குகள், மயில்கள் உள்பட சிறு வன உயிரினங்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளன. கோடை மழை பெய்தால் மட்டுமே வனப்பகுதியில் நிலவும் வறட்சியை சமாளிக்க முடியும். இதுவரை இல்லாத அளவுக்கு தற்போது கோடை வெயில் கடுமையாக உள்ளது.
இதனால் தாவரங்களை உண்டு வாழும் வனவிலங்குகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் வனவிலங்குகளின் தாகத்தை தீர்க்க வனத்துக்குள் பல இடங்களில் தொட்டிகள் அமைத்து அதில் தண்ணீர் நிரப்பி வருகிறோம்.
மேலும் முதுமலை வளர்ப்பு யானைகளுக்கு கோபிசெட்டிபாளையத்தில் இருந்து சோளத்தட்டைகள் வரவழைக்கப்பட்டு வழங்கப் படுகிறது.
இதுதவிர காட்டுத்தீயும் கூடலூர் பகுதியில் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க வனத்துறையினர் கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு உள்ளனர். இருப்பினும் ஊருக்குள் நுழையும் காட்டு யானைகளை விரட்டுதல், காட்டுத்தீயை அணைக்கும் பணி என வனத்துறையினர் இடைவிடாமல் பணியாற்றும் நிலை காணப்படுகிறது.
கூடலூர் வன கோட்டத்தில் வன ஊழியர்கள் பணியிடங்கள் தொடர்ந்து காலியாக கிடக்கும் நிலையில் பணிச்சுமையால் வனத்துறையினர் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். வனத்தில் காட்டுத்தீ பரவுவதால் காட்டு யானைகள், சிறுத்தைப்புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் வருகின்றன. இதனால் மனித- வனவிலங்குகள் மோதல் ஏற்படுகிறது. எனவே காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். கோடை மழையும் பெய்ய வேண்டும் என வனத்துறையினரும் எதிர்பார்த்துள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.