மண்டியா தொகுதியில் சுமலதாவுக்கு ஆதரவாக நடிகர் சுதீப் பிரசாரம் செய்ய மாட்டார் மானேஜர் அறிவிப்பு
மண்டியா தொகுதியில் சுமலதாவுக்கு ஆதரவாக நடிகர் சுதீப் பிரசாரம் செய்ய மாட்டார் என்று அவரது மானேஜர் கூறினார்.;
பெங்களூரு,
மண்டியா தொகுதியில் சுமலதாவுக்கு ஆதரவாக நடிகர் சுதீப் பிரசாரம் செய்ய மாட்டார் என்று அவரது மானேஜர் கூறினார்.
பிரசாரம் செய்ய மாட்டார்
மண்டியா தொகுதியில் நடிகை சுமலதா, சுயேச்சையாக போட்டியிட்டுள்ளார். காங்கிரஸ் கூட்டணியில் ஜனதா தளம்(எஸ்) சார்பில் முதல்-மந்திரியின் மகன் நிகில் குமாரசாமி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அவர்கள் இருவர் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
சுமலதாவுக்கு ஆதரவாக நடிகர்கள் தர்ஷன், யஷ் ஆகியோர் பிரசாரம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் நடிகர் சுதீப்பும் பிரசாரத்திற்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், நடிகர் சுதீப், மண்டியா தொகுதியில் சுமலதாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய மாட்டார் என்று அவரது மானேஜர் கூறினார். இதுகுறித்து மானேஜர் மஞ்சுநாத்கவுடா கூறியதாவது:-
அவப்பெயா் ஏற்படும்
நடிகர் சுதீப், நடிகை சுமலதாவுக்கு ஆதரவாக மண்டியா தொகுதியில் பிரசாரம் செய்ய மாட்டார். முதல்-மந்திரி குமாரசாமி மற்றும் சுமலதா இருவருமே வேண்டியவர்கள். அதனால் யாருக்கு ஆதரவாகவும் சுதீப் பிரசாரம் செய்ய மாட்டார்.
இனி எப்போதும் எந்த தேர்தலிலும் யாருக்கு ஆதரவாகவும் சுதீப் பிரசாரம் செய்ய மாட்டார். ஒருவரை ஆதரித்து தேர்தலில் பிரசாரம் செய்தால், வேட்பாளர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதபோது, பிரசாரம் செய்தவருக்கு அவப்பெயர் ஏற்படும்.
இவ்வாறு மஞ்சுநாத்கவுடா கூறினார்.