கர்நாடகத்தில் இன்று வருமான வரி சோதனை நடத்த திட்டம் மத்திய அரசு மீது குமாரசாமி ‘பகீர்’ குற்றச்சாட்டு பதிலடி கொடுப்போம் என சவால்
கர்நாடகத்தில் இன்று (வியாழக்கிழமை) வருமான வரி சோதனை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக ‘பகீர்’ குற்றச்சாட்டை கூறிய குமாரசாமி, மேற்கு வங்காளத்தை போல் பதிலடி கொடுப்போம் என சவால் விடுத்துள்ளார்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் இன்று (வியாழக்கிழமை) வருமான வரி சோதனை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக ‘பகீர்’ குற்றச்சாட்டை கூறிய குமாரசாமி, மேற்கு வங்காளத்தை போல் பதிலடி கொடுப்போம் என சவால் விடுத்துள்ளார்.
கூட்டணி ஆட்சி
கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த கூட்டணியில் முதல்-மந்திரியாக குமாரசாமி உள்ளார். இந்த நிலையில் மாநிலத்தில் கூட்டணி ஆட்சியை கவிழ்த்துவிட்டு ஆட்சியை பிடிக்க பா.ஜனதா தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தது. ஆபரேஷன் தாமரை மூலமும் பா.ஜனதா முயற்சி செய்தது. ஆனால் பா.ஜனதாவினரின் முயற்சி பலனளிக்கவில்லை.
கூட்டணி கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.வை தங்கள் பக்கம் இழுக்க பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா பேரம் பேசிய ஆடியோவை குமாரசாமி வெளியிட்டார். முதலில் இதனை மறுத்த எடியூரப்பா, பின்னர் ஆடியோவில் பேசியதை ஒப்புக்கொண்டார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைதொடர்ந்து ஆபரேஷன் தாமரை திட்டத்தை பா.ஜனதா கைவிட்டது.
தீவிர பிரசாரம்
இதற்கிடையே கர்நாடகத்தில் நாடாளுமன்ற ேதர்தலை காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து எதிர்கொள்வதாக அறிவித்து இருந்தது. அதன்படி காங்கிரஸ் கட்சிக்கு 21 தொகுதிகளும், ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு 7 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் அடுத்த மாதம் 18 மற்றும் 23-ந்தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.
மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி-பா.ஜனதா இடையே இருமுனை போட்டி நிலவுகிறது. முதல்கட்ட தேர்தலுக்கு வேட்புமனு முடிவடைந்து உள்ளது. இதனால் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிரமாக தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகின்றனர்.
குமாரசாமி பகீர் குற்றச்சாட்டு
இந்த தேர்தலில் முதல்-மந்திரி குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி மண்டியா தொகுதியில் கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து குமாரசாமி மண்டியாவில் முழுவீச்சில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் நேற்றும் அவர் மண்டியாவில் தனது மகனை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர், கா்நாடகத்தில் பா.ஜனதா தோல்வி அடைந்துவிடுமோ என்ற பயத்தில் மத்திய அரசு மாநிலத்தில் பெரிய அளவில் வருமான வரி சோதனையை நடத்த திட்டமிட்டுள்ளதாக ‘பகீர்’ குற்றச்சாட்டை தெரிவித்தார்.
இதுகுறித்து முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பெரிய அளவில் வருமானவரி சோதனை
கர்நாடகத்தில் நாளை (இன்று) பெரிய அளவில் வருமான வரி சோதனை நடத்த திட்டமிட்டுள்ளதாக எனக்கு தகவல் வந்துள்ளது. பா.ஜனதாவை சோ்ந்த நிர்வாகி ஒருவர் எனக்கு போன் மூலம் தகவல் கொடுத்தார்.
இதற்காக 250 முதல் 300 அதிகாரிகள் வெளியூர்களில் இருந்து விமானம் மூலம் பெங்களூரு வருகிறார்கள். அவர்களை அழைத்து வர வாடகை கார்களை பேசி ஒப்பந்தம் செய்துள்ளனர். மத்திய போலீஸ் படை பாதுகாப்பில் இந்த சோதனையை மேற்கொள்ள உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த ஆட்டம் நீண்ட நாட்கள் நடக்காது. வருமான வரித்துறை அதிகாரி பாலகிருஷ்ணன் தலைமையில் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார். அவர் பா.ஜனதாவின் ஏஜெண்டை போல் செயல்படுகிறார்.
மேற்கு வங்காளத்தை போல...
தேர்தல் நேரத்தில் இதுபோன்ற சோதனைகள் நடைபெறும் என்று எங்களுக்கு தொியும். மேற்கு வங்காளத்தில் நடந்தது போலவே, கர்நாடகத்திலும் நாங்கள் பதிலடி கொடுக்கும் நிலை ஏற்படும்.
பா.ஜனதாவினர் கீழ்மட்ட அரசியல் செய்கிறார்கள். எங்களை மிரட்ட முயற்சி செய்கிறார்கள். நான் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது இல்லை.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.